தூத்துக்குடியில்181 பேருக்கு நோன்பு பெருநாள் தர்மம் வழங்கல்
தூத்துக்குடியில் 181 பேருக்கு நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது.
இஸ்லாம் மதத்தில் இரு பெரு நாட்களில் நோன்பு பெருநாளும் ஒன்றாகும். வறுமையில் வாடும் ஏழை, எளிய முஸ்லிம்கள் பெருநாள் தினத்தன்று உணவில்லாமல் இருக்க கூடாது என்று ஏழைகளின் துயர் துடைக்க இஸ்லாம் இந்த தர்மத்தை கடமையாக்கி இருக்கிறது. பெருநாள் தொழுகைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு சதக்கத்துல் பித்ர் எனும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்க இஸ்லாம் வலியுறுத்துகிறது.
அந்தவகையில் குவைத் ஐ.டி.சி, மஸ்ஜித் ரகுமான் அமைப்பு இணைந்து தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, மசாலா பொருட்கள் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மஸ்ஜித் ரஹ்மான் தலைவர் கா.மை.அகமது இக்பால், செயலாளர் சுலைமான் ஆகியோர் ஏழை எளிய மக்கள் 181 பேருக்கு ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 500 மதிப்புள்ள பித்ரா என்னும் பெருநாள் தர்மத்தை வழங்கினர். நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் நவாஸ், முகமது, இஸ்மாயில், யஹ்யா, மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், நாசரேத் வாழையடி முஸ்லிம் மஹல்லாவாசிகள் ஒருங்கிணைந்து நடத்திய சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு விழா மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜிம்ஆ பள்ளி வாசல் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைவர் அஸ்ரப்அலிபைஜி தலைமை தாங்கினார். பேராசிரியர் இப்திகார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை எஸ்.சித்திக் தொகுத்து வழங்கினார். விழாவில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் ஞானசேகர், ஜான்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தலைமை ஒருங்கிணைப்பாளர் எம். யூசுப் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நாசரேத் வாழையடி மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜீம்ஆ பள்ளி வாசல் தலைவர் மற்றும் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.