தூத்துக்குடியில் முடி திருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி முடி திருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட மருத்துவ மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மாநில செயலாளர் ஆர்.ரசல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஆர்.பேச்சிமுத்து, தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்க பொதுச்செயலாளர் நாகராஜ், கவுரவ தலைவர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் அமைப்புசாரா நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கட்டுமானம் தொழிலாளர் நலவாரியத்தில் வழங்குவது போன்ற பணப்பயன்கள் உயர்த்தி வழங்க வேண்டும், தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும், முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும், சலூன் மற்றும் அழகு நிலையங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும், கொரோனா பாதிப்பு காலத்தை கணக்கில் கொண்டு வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் தொழிலாளர்களின் பெற்ற நகைக்கடன், கல்விக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அப்போது, அங்கு வந்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டத்தில் சங்க துணைத்தலைவர் ஞானசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.