தூத்துக்குடியில்காரில் கடத்தி வந்த240 கிலோ கஞ்சா சிக்கியது:2 பெண்கள் உள்பட 16 பேரிடம் விசாரணை
தூத்துக்குடியில் காரில் கடத்தி வந்த 240 கிலோ கஞ்சா சிக்கியது. இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 16 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் காரில் கடத்தி வந்த 240 கிலோ கஞ்சா சிக்கியது. இதுதொடர்பாக 2 பெண்கள் உள்பட 16 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வாகன சோதனை
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலை தடுக்க மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று தூத்துக்குடிக்கு 2 சொகுசு கார்களில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
250 கிலோ கஞ்சா
அப்போது, அங்கு 2 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. முதல் காரை ஆந்திராவை சேர்ந்த டிரைவர் ஒருவர் ஓட்டி வந்தார். இதனால் சந்தேகத்தின் பேரில் போலீசார் அந்த காரை சோதனை செய்தனர். அதில் ஒரு பெண் உள்பட 3 பேர் இருந்து உள்ளனர். அதே போன்று பின்னால் வந்த காரில் டிரைவர் மற்றும் ஒரு பெண் மட்டும் இருந்து உள்ளனர்.
இதையடுத்து 2 கார்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அதில் மொத்தம் 5 மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அந்த மூட்டைகளை திறந்து பார்த்த போது, அவை அனைத்தும் கஞ்சா என்பது தெரியவந்தது. மொத்தம் சுமார் 240 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
16 பேரிடம் விசாரணை
உடனடியாக போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, 2 கார்களிலும் இருந்த 2 பெண் உள்பட 6 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்களின் செல்போன் அழைப்புகளை கொண்டும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இந்த கஞ்சா கடத்தலில் பலர் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதனால் தீவிரமாக களம் இறங்கிய போலீசார், அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் உள்பட மேலும் 10 பேரை மடக்கி பிடித்தனர்.
தொடர்ந்து பிடிபட்ட 16 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தலில் பெண்களை ஈடுபடுத்தி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளத்தில் 2 ஆயிரம் கிலோ கஞ்சாவும், கடந்த வாரம் கோவில்பட்டியில் 600 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.