தூத்துக்குடியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
தூத்துக்குடியில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.
தூத்துக்குடியில் கொரோனாவுக்கு நேற்று ஒருவர் பலியானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கொரோனா பரவல் அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் அதனை கட்டுப்படுத்த மாநில அரசு முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், தியேட்டர், குளிர்சாதன வசதி கொண்ட மூடப்பட்ட அரங்கு உள்ளிட்ட ெபாதுஇடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடியில் ஒருவர் பலி
இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தூத்துக்குடியை சேர்ந்த 54 வயதான ஆண் ஒருவர் கடந்த 21-ந் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது, அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
தொற்று உறுதி
தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 30-ந்தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் அவர் பரிதாபமாக இறந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு தூத்துக்குடியில் கொரோனாவுக்கு உயிர்ப்பலி ஏற்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.