தூத்துக்குடியில்திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை திடீர் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மழை
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி நேற்று அதிகாலை 4 மணி அளவில் தூத்துக்குடியில் திடீரென பலத்த மழை பெய்தது. சிறிது நேரத்துக்கு பிறகு இந்த மழை சற்று குறைந்தது. தொடர்ந்து காலை வரை தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இந்த மழை காரணமாக தூத்துக்குடியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது.
மகிழ்ச்சி
இதே போன்று மாவட்டத்தில் பல இடங்களிலும் மிதமான மழை பெய்தது. நேற்று மாலையில் மீண்டும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மழையால் தூத்துக்குடி உப்பளங்களிலும் மழைநீர் தேங்கியது. ஆனால் உப்பு உற்பத்தியில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த திடீர் மழை காரணமாக கடந்த சில நாட்களாக மக்களை வாட்டி எடுத்த வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. இதனால் மக்கள மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.