தூத்துக்குடியில் கஞ்சா விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை
தூத்துக்குடியில் கஞ்சா விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
ஆய்வுக் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை அலுவலகத்தில் போலீசாருக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், ரவுடிகள் நடமாட்டத்தை ஒடுக்குவது குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன.
ரவுடிகள் மீது நடவடிக்கை
இக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருட்கள், புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க ேபாலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று ரவுடிகள் நடமாட்டத்தை அடியோடு ஒடுக்கவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்' என்றார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், விளாத்திகுளம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், அரசு வக்கீல்கள் கலந்து கொண்டனர்.