தூத்துக்குடியில்துறைமுக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் துறைமுக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த கோரி துறைமுக தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி பழைய துறைமுகம் முன்பு துறைமுக தொழிலாளர் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும், இரண்டு ஆண்டுகள் நிலுவையில் உள்ள போனஸ் பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும், துறைமுகத்தின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், துறைமுக சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு வ.உ.சி. துறைமுக லேபர் டிரஸ்டி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய நீர்வழி போக்குவரத்து சம்மேள பொதுச் செயலாளர் நரேந்திர ராவ், எச் எம் எஸ் சங்க தலைவர் முகமது ஹனீப், எச்.எம்.எஸ். டபிள்யூ ஆசிம் சூத்ரதார், ஏ.ஐ.டி.யு.சி சரவணன், ஐ.என்.டி.யு.சி பலராம், சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் பாலசிங்கம், பாண்டி, எச்.எம்.எஸ்.டபிள்யூ கென்னடி, கிளிங்டன், எச்.எம்.எஸ். சத்தியநாராயணன், ஐ.என்.டி.யு.சி. ராஜகோபால், சந்திரசேகர், செல்வக்குமார், கனகராஜ், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டம்
பின்னர் அகில இந்திய நீர்வளி போக்குவரத்து சம்மேளனம் பொது செயலாளர் நரேந்திர ராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 1.1.2022 முதல் அமல்படுத்த வேண்டிய துறைமுக தொழிலாளர் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும், 2 ஆண்டுகள் நிலுவையில் உள்ள போனஸ் பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும், துறைமுகத்தின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், துறைமுக சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும், 1.01.2004 க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரகிறோம். இந்த ஆண்டுக்குள் இந்த கோரிக்கைகள் குறித்து துறைமுக நிர்வாகம் மற்றும் மத்திய அரசு தலையிட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும். கோரிக்கையை நிறைவேற்றாதபட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறினார்.