தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளை தேடிச்ெசன்று மனுக்கள் பெற்ற கலெக்டர்
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளை தேடிச்ெசன்று மனுக்கள் பெற்ற கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திற்கு கலெக்டர் சென்று கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர்.
300 கோரிக்ைக மனு
நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 300 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறைசார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திற்கு சென்று கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களிடம் விசாரித்தார். பின்னர் அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ் குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஜேன் கிறிஸ்டி பாய் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.