தூத்துக்குடியில் பெண் அடித்துக்கொலை?


தூத்துக்குடியில்  பெண் அடித்துக்கொலை?
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் பெண் பிணமாக கிடந்தார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூட்டிய வீட்டுக்குள்...

நெல்லை மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்தவர் பார்வதி (வயது 56). இவருடைய கணவர் இறந்து விட்டாராம். பின்னர் பார்வதி தன்னுடைய பிள்ளைகளை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பார்வதி, தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் உள்ள கருணாநிதி நகரில் குடியேறினார்.

அவருடன் நாகர்கோவில் பகுதியைச் ேசர்ந்த சுரேஷ் (44) என்பவரும் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் 2 பேரும் கூலி வேலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் சுரேஷ் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். தொடர்ந்து இரவு வரையிலும் அவர்களது வீடு பூட்டிக் கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடலில் காயத்துடன் பெண் பிணம்

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பார்வதியின் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பார்வதி பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலில் லேசான காயங்களும் இருந்தன.

பார்வதியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடித்துக்கொலை?

இதற்கிடையே வேலைக்கு சென்ற சுரேஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் போலீசாரின் சந்தேகம் அதிகரித்துள்ளது. மேலும் பார்வதியின் உடல் பிரேத பரிசோதனையில், அவரது நெஞ்சு எலும்பு உடைந்து இருந்தது தெரிய வந்தது.

இதனால் பார்வதி அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் சந்தேக மரணம் வழக்கு, கொலை வழக்காக மாறும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து மாயமான சுரேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

---


Next Story