உக்ரைன் நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி - ஆவின் ஊழியர் கணவருடன் கைது
உக்ரைன் நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த ஆவின் ஊழியர் கணவருடன் கைது செய்யப்பட்டாா்
உக்ரைன் நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் ஆவின் பெண் ஊழியர் மற்றும் அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.
மருத்துவ படிப்பு
கவுந்தப்பாடியை சேர்ந்தவர் சாமிநாதன். விவசாயி. ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றியும் வருகிறார். இவருடைய மகன் கவியரசு. எம்.பி.பி.எஸ். (மருத்துவம்) படிப்பதற்காக கடந்த 2018-ம் ஆண்டு நீட் தேர்வு எழுதினார். தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால், மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து சாமிநாதன் ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றும் போது அறிமுகமான, ஈரோடு எல்லப்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்த ஆவினில் தற்காலிக ஊழியராக வேலை பார்க்கும் தனலட்சுமி (வயது 52) என்பவரிடம் மகனுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.
இதற்கு தனலட்சுமி தனது மகன் ஜோகித் (24) உக்ரைன் நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வருவதாகவும், அவர் மூலமாக அந்த நாட்டில் மருத்துவ படிப்பில் சேர்த்து விடுவதாகவும் கூறி உள்ளார். இதனால் சாமிநாதன் மகன் கவியரசு மற்றும் அவருடைய நண்பர் நவீன் வர்ஷன் ஆகியோர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்க செல்வதாக தனலட்சுமியிடம் கூறினர்.
மிரட்டல்
இதையடுத்து தனலட்சுமி, அவருடைய கணவரான ஜே.சி.பி. வாகன உரிமையாளர் வேலுச்சாமி (52), அவரது மகன் ஜோகித் ஆகியோர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்க இருவரிடம் சேர்த்து ரூ.14 லட்சத்து 96 ஆயிரம் பெற்றனர். அதைத்தொடர்ந்து கவியரசு, நவீன் வர்ஷன் ஆகியோரை விமானம் மூலம் உக்ரைன் நாட்டிற்கு 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் அனுப்பி வைத்தனர்.
அங்கு தனலட்சுமியின் மகன் ஜோகித், மருத்துவ கல்லூரியில் சேர்த்துவிடாமல் இருவரையும் தனது அறையில் அடைத்து வைத்து, அந்நாட்டில் உள்ள தனது நண்பர்கள் மூலமாக கவியரசையும், நவீன் வர்ஷனையும் மிரட்டி வந்துள்ளார். மேலும் இருவரின் பெற்றோரிடமும் ஜோகித், 2-வது பருவத்திற்கு கல்லூரிக்கு பணம் செலுத்த வேண்டும், பணத்தை அனுப்பி வைக்குமாறு போனில் கூறியுள்ளார்.
இதில், சந்தேகம் அடைந்த சாமிநாதன் மற்றும் நவீன் வர்ஷனின் பெற்றோர் உக்ரைன் நாட்டில் உள்ள தமிழகத்தை சேர்ந்த வேறு மாணவர்கள் மூலமாக விசாரித்ததில், தங்களது மகன்களுக்கு மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி கொடுக்கவில்லை என்பதும், மாணவர்கள் விசாவில் அழைத்து வராமல் சுற்றுலா விசாவில் அழைத்து சென்றதும் தெரியவந்தது.
மோசடி
இதையடுத்து தமிழக மாணவர்கள் சிலர் கவியரசையும், நவீன் வர்ஷனையும் உக்ரைன் நாட்டில் இருந்து மீட்டு தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சாமிநாதன், நவீன் வர்ஷன் பெற்றோர் தனலட்சுமி, வேலுச்சாமியிடம் கொடுத்த ரூ.14 லட்சத்து 96 ஆயிரத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சாமிநாதன் இதுகுறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் தனலட்சுமி, அவரது மகன் ஜோகித், கணவர் வேலுச்சாமி ஆகியோர் பணத்தை பெற்று மோசடி செய்ததை உறுதி செய்தனர்.
கைது
இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேர் மீதும் கூட்டு சதி, ஏமாற்றுதல், பணத்தை பெற்று மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று தனலட்சுமியையும், அவரது கணவர் வேலுச்சாமியையும் கைது செய்தனர். மேலும், உக்ரைன் நாட்டில் உள்ள ஜோகித்தை தமிழகத்திற்கு அழைத்து வந்து கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகிறார்கள்.