உசிலம்பட்டியில், மரத்தை அகற்றும் போது குழாய் உடைந்து வீணாகிய குடிநீர்


உசிலம்பட்டியில் சாலை விரிவாக்க பணிக்காக மரத்தை அகற்றும் போது குழாய் உடைந்து குடிநீர் வீணாகியது. இதனால் அந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டியில் சாலை விரிவாக்க பணிக்காக மரத்தை அகற்றும் போது குழாய் உடைந்து குடிநீர் வீணாகியது. இதனால் அந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

வீணாகிய குடிநீர்

உசிலம்பட்டி நகர் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடந்தது. இதையொட்டி உசிலம்பட்டியில் 100 ஆண்டுகள் பழமையான 27 மரங்களை வெட்டி அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் முருகன் கோவில் முன்பு சாலையோரம் இருந்த மரத்தை அகற்ற குழி தோண்டிய போது சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாகி சாலையில் ஓடியது.

சீரமைக்க கோரிக்கை

இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் நீர் வீணாகியது. குழாய் உடைப்பை சரி செய்யும் வரை குடிநீர் வினியோகம் நிறுத்தி வைக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனால் சேடபட்டி, உசிலம்பட்டி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். குழாய் உடைப்பை அதிகாரிகள் விரைந்து சரி செய்ய வேண்டும். அதோடு சாலை விரிவாக்க பணியின் போது குழி தோண்டும் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படாமல் கவனத்துடன் பணியை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


Related Tags :
Next Story