உத்தமதானபுரத்தில் உ.வே.சா. பிறந்தநாள் விழா
வலங்கைமான் அருகே உத்தமதானபுரத்தில் உ.வே.சா. பிறந்த நாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு கலெக்டர் சாருஸ்ரீ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வலங்கைமான்:
வலங்கைமான் அருகே உத்தமதானபுரத்தில் உ.வே.சா. பிறந்த நாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு கலெக்டர் சாருஸ்ரீ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உ.வே.சாமிநாத ஐயர்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவை சேர்ந்த உத்தமதானபுரம் கிராமத்தில் பிறந்தவர் உ.வே.சாமிநாத ஐயர். இவர் கடந்த நூற்றாண்டில் இந்தியா மட்டுமல்லாமல், அந்நிய தேசங்களில் இருந்தும் காவிரி, கங்கை உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழ் அரிச்சுவடி ஓலைகளை தேடி கண்டுபிடித்ததுடன், அவைகளை ஒருங்கிணைத்து, இலக்கியம் மற்றும் எழுத்து வடிவமாக்கியதில் பெரும்பங்காற்றியவர். இவரால் அரிய பல தமிழ் நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் உ.வே.சாமிநாத ஐயர், தமிழ் தாத்தா உ.வே.சா. என அழைக்கப்படுகிறார்.
அரசு விழாவாக கொண்டாட்டம்
தமிழுக்கு பெரும்பங்காற்றிய உ.வே.சா. பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் வலங்கைமான் அருகே உத்தமதானபுரம் கிராமத்தில் உள்ள அவரது வீடு நினைவு இல்லமாக அறிவிக்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது ஓலைச்சுவடிகள், தமிழ் நூல்கள் உள்ளிட்ட பல்வேறு நினைவு பொருட்கள் வைக்கப்பட்டு, நூலகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. நினைவு இல்லத்தில் உ.வே.சா.வின் மார்பளவு சிலை, தமிழக அரசால் அமைக்கப்பட்டு உள்ளது.
பிறந்த நாள் விழா
இந்த நிலையில் உ.வே.சா. பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் உதவி கலெக்டர் சங்கீதா, வலங்கைமான் தாசில்தார் சந்தான கோபாலகிருஷ்ணன், ஒன்றிய ஆணையர்கள் கமலராஜன், பொற்செல்வி, ஒன்றிய குழு உறுப்பினர் அன்பரசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், நினைவு இல்ல நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.