வடலூரில் வேளாண்மை துறையில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
வடலூரில் வேளாண்மை துறையில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
வடலூர்,
வடலூரில் வேளாண் மற்றும் சகோதர துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழக வேளாண்மைத்துறை இயக்குநர் அண்ணாதுரை, கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பயிர் வாரியான சாகுபடி பரப்பு, உணவு தானிய உற்பத்தி, சம்பா சாகுபடிக்கு தேவையான விதை வினியோகம், விதை மற்றும் உர இருப்பு ஆகியவற்றை வட்டாரம் வாரியாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். தொடர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்பட்ட இடுபொருட்கள் வினியோகம், வேளாண்மை பொறியியல் துறைமூலம் செய்யப்பட்ட வாய்க்கால் தூர்வாருதல், பண்ணைகுட்டை அமைத்தல், ஆழ்துளைகிணறு அமைத்தல் போன்ற பணிகளையும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்தார்.
பலா பதப்படுத்தும் மையம்
பண்ருட்டியில் கட்டப்பட்டு வரும் பலா பதப்படுத்தும் மையத்தையும், குறிஞ்சிப்பாடியில் கட்டப்பட்டு வரும் முந்திரி மற்றும் காய்கறி பதப்படுத்தும் மையத்தையும் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதில் கடலூர் வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் நடராஜன், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் டாக்டர் பாண்டியன், மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவக்குமார், வடலூர் நகராட்சி தலைவர் சிவக்குமார், நகரசெயலாளர் தமிழ்ச்செல்வன், துணை தலைவர் சுப்புராயலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.