வேலூர் பாலாற்றில் 4,800 கனஅடி நீர் செல்கிறது


வேலூர் பாலாற்றில்   4,800 கனஅடி நீர் செல்கிறது
x

தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வேலூர் பாலாற்றில் 4,800 கனஅடி நீர் செல்கிறது.

வேலூர்

தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக வேலூர் பாலாற்றில் 4,800 கனஅடி நீர் செல்கிறது.

பாலாற்றில் வெள்ளம்

மாண்டஸ் புயல் காரணமாக வடதமிழகத்தில் கனமழை பெய்தது. வேலூர் மாவட்டத்திலும் 2 நாட்கள் இடைவிடாது மழை கொட்டியது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாலாற்றிலும் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்தநிலையில் ஆந்திராவில் பாலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாலாற்றின் முக்கிய இடங்கள், பாலங்கள், தரைப்பாலங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களை வருவாய்த்துறையினர் கண்காணித்து வருகின்றனர். யாரும் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

4,800 கனஅடி நீர்

புல்லூர் தடுப்பணையில் இருந்து அதிகப்பட்சமாக நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 2,150 கனஅடிநீர் வெளியேறி வருகிறது. மண்ணாற்றில் இருந்து 240 கனஅடி நீரும், கல்லாற்றில் இருந்து 100 கனஅடிநீரும், மலட்டாற்றில் இருந்து 950 கனஅடிநீரும், அகரம்ஆற்றில் இருந்து 425 கனஅடிநீரும் பாலாற்றில் கலக்கிறது.

மேலும் மோர்தானா அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் கவுண்டன்ய ஆற்றில் சென்று 750 கனஅடியாக பாலாற்றில் கலக்கிறது. கொட்டாற்றில் இருந்து 50 கனஅடி நீரும், பேயாற்றில் இருந்து 30 கனஅடிநீரும் பாலாற்றில் செல்கிறது.

இதுதவிர கால்வாய்கள், ஓடைகளில் இருந்து சுமார் 60 கனஅடி நீர் பாலாற்றுக்கு செல்கிறது. வேலூர் பாலாற்றுக்கு வந்தடையும் நீரின் அளவு சுமார் 4,800 கனஅடியாக உள்ளது. முக்கிய கிளை நதியான பொன்னையாற்றில் இருந்து பல்வேறு ஏரிகளுக்கு நீர் செல்கிறது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story