விழுப்புரம் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை


விழுப்புரம் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை
x

விழுப்புரம் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நள்ளிரவில் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மதியம் வரை வெயில் வாட்டி, வதைத்து வந்த நிலையில் இரவு 10.30 மணிக்கு மேல் திடீரென பலத்த காற்று வீசத்தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் பயங்கர இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது.

இந்த மழை இடைவிடாமல் ஒரு மணி நேரமாக கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்க நின்றதால் அப்பகுதி வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

மின் தடை

கனமழையுடன் அவ்வப்போது பலத்த காற்றும் சுழன்று வீசியதால் விழுப்புரம் நகரம் மற்றும் பல்வேறு கிராமப்புறங்களிலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் நள்ளிரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது. இந்த மின் தடையால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் கொசுத்தொல்லையால் மிகவும் அவதிப்பட்டனர்.

இதேபோல் மணம்பூண்டி, மேல்மலையனூர், அவலூர்பேட்டை, விக்கிரவாண்டி, செஞ்சி, திருவெண்ணெய்நல்லூர், வானூர், மரக்காணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை நேற்று அதிகாலை வரை விட்டுவிட்டு தூறிக்கொண்டே இருந்தது.

மழையில் நனைந்தநெல் மூட்டைகள்

மழை ஓய்ந்த பின்னர் நேற்று காலை முதல் அறுந்து கிடந்த மின் கம்பிகளை சீரமைத்து மின்சார வினியோகம் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


Next Story