விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம்
விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.
விழுப்புரம்,
பொது வினியோக திட்டத்திற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியையும் சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்க 31 சதவீத அகவிலைப்படியை ரேஷன் கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும், சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்கப்பட வேண்டும், ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்தன.
பொருட்கள் வழங்கும் பணி பாதிப்பு
இதுகுறித்து அந்த சங்க நிர்வாகிகள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 1,252 ரேஷன் கடைகள் உள்ளன. எங்கள் சங்கத்தின் சார்பில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 700 பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதன் காரணமாக சுமார் 900-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் நகர்வு செய்யும் பணியும், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளதுஎன்றனர்.
செஞ்சி-திருவெண்ணெய்நல்லூர்
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி செஞ்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணைத் தலைவர் பழனிவேல், மாவட்ட இணைச் செயலாளர்கள் தசரதன், கதிர்வேலு, பன்னீர்செல்வம் மற்றும் உறுப்பினர்கள் செஞ்சி, மேல்மலையனூர் வட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் திருவெண்ணெய்நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஆலோசகர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் சங்கர், வட்ட செயலாளர் கணேசன், வட்ட பொருளாளர் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் விற்பனையாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் விழுப்புரம், கண்டாச்சிபுரம், வானூர் ஆகிய வட்ட தலைநகரங்களில் ரேஷன் கடை பணியாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.