விளாத்திகுளம் பகுதியில் தராசுகள், எடையளவுகள் முத்திரை முகாம்


விளாத்திகுளம் பகுதியில்  தராசுகள், எடையளவுகள் முத்திரை முகாம்
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் பகுதியில் தராசுகள், எடையளவுகள் முத்திரை முகாம் புதன்கிழமை முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது

தூத்துக்குடி

விளாத்திகுளம் பகுதியில் தராசுகள், எடையளவுகள் முத்திரை முகாம் இன்று(புதன்கிழமை) முதல் வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முத்திரை முகாம்

சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் 2011-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமுறை எடையளவு (அமலாக்கம்) விதிகளின் படி மின்னணு தராசுகள், மேடைத் தராசுகள், கைத்தராசுகள், படிக்கற்கள். ஊற்றல் அளவைகள் மற்றும் இதர எடை அளவுகள் மற்றும் எடையளவு கருவிகள் ஆகியவற்றினை மறுபரிசீலனை செய்து முத்திரையிட்டு வழங்கும் காலாண்டிற்கான முத்திரை முகாம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள குரு லாட்ஜில் இன்று(புதன்கிழமை) முதல் 25-ந்தேதி வரை நடக்கிறது.

இணையதளத்தில் பதிவு

இந்த முத்திரை முகாமிற்கு வரும் வணிகர்கள் தங்களது விண்ணப்பங்கள் மற்றும் முத்திரைக் கட்டணம், தாமதக் கட்டணம் ஆகியவற்றை இணையதளம் வாயிலாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும். எடைகள், அளவைகள் மற்றும் எடையளவுக் கருவிகளை பயன்படுத்தும் அனைத்து வணிகர்களும், நிறுவனத்தினரும் முத்திரையிடுவதற்கான விண்ணப்பத்தினை www.labour.tn.gov.in என்ற தொழிலாளர் துறை இணையதளத்தில் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட உள்ளீட்டு முகவரியில் தங்களது நிறுவனத்தின் விபரம் ஏற்கெனவே வழங்கப்பட்டு உள்ள பரிசீலனை சான்று மற்றும் எடையளவு கருவிகளின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

சான்றிதழ்

இணையதளம் வாயிலாக உரிய கட்டணம் செலுத்தப்பட பின்னர் முத்திரை ஆய்வாளரால் மேற்படி விவரங்கள் சரிபார்க்கப்பட்டு எடையளவுகளை பரிசீலனை செய்வதற்கென தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நாட்களில் நேரில் மறுபரிசீலனை செய்ய வேண்டிய எடையளவு கருவிகளோடு ஆஜராக வேண்டும். முத்திரை ஆய்வாளரால் மறுபரிசீலனை செய்யப்பட்டு அதன்பின்னர் இணையதளம் வாயிலாகவே உரிய முத்திரை மறுபரிசீலனை சான்றிதழினை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த முகாமில் விளாத்திகுளாம். குளத்தூர், வேம்பார் மற்றும் விளாத்திகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட இதர பகுதிகளில் உள்ள அனைத்து வணிகர்கள் மற்றும் நிறுவனத்தினர் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story