விளாத்திகுளத்தில் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
விளாத்திகுளத்தில் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
எட்டயபுரம்:
மிளகாய் பயிருக்கு நிவாரண தொகை வழங்க கோரி
விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தாலுகா அலுவலகம் முற்றுகை
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று காலையில் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ராகவன் முன்னிலை வகித்தார். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கோரிக்கைகள்
புதூர் வட்டார பகுதிகளில் மிளகாய் சாகுபடிசெய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த வாரம் நிவாரணத் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. ஆனால் விளாத்திகுளம் வட்டார பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிளகாய் பயிருக்கான நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. எனவே, உடனடியாக விளாத்திகுளம் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மிளகாய் பயிருக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். தனியார் காப்பீடு நிறுவனத்தில் பதிவு செய்வதை தவிர்த்து தமிழக அரசே காப்பீடு நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், உரிய நடவடிக்கை எடுக்காத விளாத்திகுளம் தோட்டக்கலை துறை அதிகாரிகளை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது.
அதிகாரிகள் உறுதி
பின்னர் விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமாரிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு வழங்கினர். அப்போது, 2020-2021-ம் ஆண்டுக்கான மிளகாய் பயிர் பாதிப்பு குறித்த பட்டியலை அதிகாரிகள் தருவதாக ஒப்புக்கொண்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.