விருத்தாசலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
விருத்தாசலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்
ஐகோர்ட்டு உத்தரவின்படி, விருத்தாசலம் இந்திரா நகரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், மாற்றும் இடம் வழங்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் இந்திரா நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக பொக்லைன் எந்திரங்களுடன் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விருத்தாசலம் சப் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டனர். அப்போது அவர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள், நாங்கள் பல ஆண்டுகளாக குடி இருந்த வீடுகளை இடிக்க கூடாது, இல்லையென்றால் எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு தாசில்தார் தனபதி கோர்ட்டு உத்தரவுபடிதான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது. மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனை ஏற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.