திருப்பூரில் 2 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை


திருப்பூரில் 2 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
x

திருப்பூரில் 2 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

திருப்பூர்

திருப்பூர்

கர்நாடக மாநிலம் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பூரில் 2 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் அழைத்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குக்கர் குண்டு வெடிப்பு

கர்நாடக மாநிலம் தட்சி கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே நாகுரி பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ந் தேதி ஆட்டோவில் வெடிவிபத்து சம்பவம் நடந்தது. இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோவில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு என்றும், அதை கொண்டு வந்தது பயங்கரவாதியான ஷாரிக் என்பதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என்பதையும், ஷாரிக்் கொண்டு செல்ல வேண்டிய இடத்துக்கு முன்பே அதிர்வுகளால் குக்கர் வெடிகுண்டு வெடித்ததும் கண்டறியப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கர்நாடக போலீசாரும், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு

போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரிக் பயங்கரவாத அமைப்பை நிறுவ திட்டமிட்டார் என்றும், அதற்காக வெளிமாநிலங்களில் ஆட்களை மூளைச்சலவை செய்து சேர்த்து வந்தார் என்றும் தகவல் வெளியானது. மேலும் ஷாரிக் தமிழ்நாட்டில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. அதனால் அவர் யார், யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் பெங்களூருவை சேர்ந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் கோவையை சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழுவினர் 10 பேர் நேற்று திருப்பூர் மாநகரில் 2 இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ராம் காலனி 2-வது வீதியில் பனியன் நிறுவன டெய்லரான முகமது ரிஸ்வான் (வயது 40) என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் காலை 6 மணி முதல் 9.30 மணி வரை விசாரணை நடத்தினார்கள். அவருடைய வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு முகமது ரிஸ்வானை விசாரணைக்காக தங்களுடன் அழைத்துச்சென்றார்கள்.

திருப்பூரில் 2 பேரிடம் விசாரணை

இதுபோல் நல்லூர் திருநகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சிக்கந்தர் பாஷா (40) என்பவர் வீட்டிலும் காலை 6 மணி முதல் 11 மணி வரை சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த சிக்கந்தர் பாஷாவிடம் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு சிக்கந்தர் பாஷாவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்காக தங்களுடன் பெங்களூருவுக்கு அழைத்துச்சென்றதாக திருப்பூர் மாநகர போலீசார் தெரிவித்தனர்.

இவர்கள் 2 பேரும், மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபருடன் செல்போன் மூலமாக தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டு அதைத்தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரேநாளில் 2 வீடுகளில் சோதனை நடத்திய சம்பவத்தால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Related Tags :
Next Story