கழுகுமலை அருகே பெண்ணுடன் தகாத உறவு:ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்
கழுகுமலை அருகே பெண்ணுடன் தகாத உறவு விவகாரத்தில் ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேர் மீது தாக்குதல் நடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கழுகுமலை:
கழுகுமலை அருகே திருமணமான பெண்ணுடன் தகாத உறவு வைத்துள்ள ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேரை 7 பேர் கும்பல் சரமாரியாக அடித்து உதைத்து கொலைமிரட்டல் விடுத்துள்ளது. இதில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணுடன் தகாத உறவு
கழுகுமலை அருகே உள்ள ஸ்ரீரங்கராஜபுரம் மேற்கு தெருவை சேர்ந்த முத்துமாரி மகன் செல்லத்துரை(வயது 22). இவரும், அண்ணன் மகன் பூமாரிசாமியும் (25) கழுகுமலை போலீஸ் நிலைய சாலையில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செல்லத்துரையும், அவ்வூரை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாக பழகி வந்ததுள்ளனர். பெண்ணுடன் தகாத உறவை துண்டித்து கொள்ளுமாறு செல்லத்துரைைய உறவினர்கள் கண்டித்து வந்துள்ளனர். ஆனாலும் அந்த பெண்ணுடன் செல்லத்துரையை தகாத உறவை தொடர்ந்துள்ளார்.
தாக்குதல்
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்லத்துரை ஓட்டலுக்கு பெண்ணின் உறவினர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக செல்லத்துரையை காரில் ஏற்றிக் கொண்டு, கழுகுமலை அருகே உள்ள ராமநாதபுரம் காட்டுப்பகுதியில் நிறுத்தியுள்ளனர். அங்கு மேலும் சிலர் இருந்துள்ளனர். அங்கு காரில் இருந்த இறங்கிய செல்லத்துரையை, உறவின பெண்ணுடன் பழகுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று கூறியவாறு அவர்கள் அடித்து உதைத்துள்ளனர். அப்போது அவரை தேடிக் கொண்டு அங்கு வந்த பூமாரி சாமியையும் கும்பல் சரமாரியாக அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளது. பின்னர் அந்த கும்பல் காரில் ஏறி தப்பி சென்று விட்டதாம்.
4 பேர் கைது
இதில் படுகாயமடைந்த செல்லத்துரையும், பூமாரிசாமியும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில், கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிட்கோ காலனி எட்டயபுரம் ரோடு ராஜ் மகன் கணேஷ்குமார் (30), தென்காசி மாவட்டம் சுந்தரேசபும் வடக்கு தெரு கணேசன் மகன் மாரிக்கண்ணன் (21), குருசாமி மகன் கணேஷ் குமார் (22), புஷ்பராஜ் மகன் முத்துகாளை (25) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சுந்தர்ராஜ் (35), கிருஷ்ணசாமி (38), பாண்டி (25) ஆகிய 3 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.