தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம்


தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம்
x

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் நேற்று கவன ஈர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே புறப்பட்ட ஊர்வலத்தை சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன் தொடங்கி வைத்தார். தலைவர் குணசேகரன், பொருளாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தில் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்கள் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அவர்கள், ஓய்வூதியம் வழங்க வேண்டும். விடுமுறை நாட்களில் ஆய்வு செய்வதை ரத்து செய்ய வேண்டும். பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கங்களுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும். நகைக்கடன் ஏலத்தில் நஷ்டம் என்று பணியாளர்களை பழிவாங்குவதை கைவிட வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கால தாமதமின்றி கருணை ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஊர்வலமாக கோஷங்களை எழுப்பியவாறு சென்று, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து சங்க நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டர் கற்பகத்தை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்துவிட்டு, அதனை முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்குமாறு கூறிவிட்டு வந்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால் 2-ம் கட்டமாக வருகிற 24-ந்தேதி சென்னையில் நடைபெறும் பேரணியில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சங்கத்தினர் அனைவரும் கலந்து கொள்வோம் என்று முடிவு செய்தனர். பணியாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்ததால் மாவட்டத்தில் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கிகளில் பணிகள் பாதிக்கப்பட்டது.


Next Story