பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கிவைப்பு-"எனது வாழ்வில் பொன் நாள்"- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கிவைப்பு-எனது வாழ்வில் பொன் நாள்-  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
x
தினத்தந்தி 16 Sept 2022 1:46 AM IST (Updated: 16 Sept 2022 3:06 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு நேற்று காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "எனது வாழ்வில் இது ஒரு பொன் நாள்" என்று பெருமிதம் தெரிவித்தார்.

மதுரை

5-ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

காலை உணவு திட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரையுள்ள 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

மதுரையில் தொடங்கி வைப்பு

வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை கீழஅண்ணாதோப்பில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் நேற்று தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து அவர், அந்த பள்ளியில் உள்ள குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். குழந்தைகளுக்கு உணவுகளை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த விழா மேடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நான் ஒருமுறை சென்னை மாநகராட்சி பள்ளி நிகழ்ச்சிக்காக சென்று இருந்தேன். அப்போது அங்கே இருக்கக்கூடிய பிள்ளைகளை பார்த்து, என்ன படிக்கிறீர்கள், ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்? என்று கேட்டேன். ஏன் சாப்பிடவில்லையா? என்றும் சாதாரணமாக கேட்டேன். அதற்கு குழந்தைகள், எப்போதும் நாங்கள் காலையில் சாப்பிடுவதில்லை, அப்படியே பள்ளிக்கூடத்திற்கு வந்து விடுவோம் என்றார்கள். அதனை கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

விரிவுபடுத்தி நிறைவேற்றுவோம்

உடனே, நான் அதிகாரிகளிடம் ஆலோசித்த போது, நிறைய பிள்ளைகள் காலையில் சாப்பிடாமல்தான் வருகிறார்கள் என்ற தகவலை அவர்கள் கூறினார்கள். அப்படியானால் காலை உணவுத்திட்டத்தை நாம் தொடங்கியாக வேண்டும் என்று உத்தரவிட்டேன்.

பள்ளிக்கு வரக்கூடிய பிள்ளைகளை பசி-பட்டினியாக வைத்து அவர்களுக்கு பாடம் சொல்லித் தரக்கூடாது என்று நினைத்தேன். அதன் மூலம் இன்றைய நாள், காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின்படி நாள்தோறும் முதல்கட்டமாக 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட இருக்கிறது.

ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 12 ரூபாய் 75 காசு செலவு செய்யப்பட இருக்கிறது. செலவு என்பதை நிர்வாக மொழியில் சொல்கிறேன். உண்மையில் இது செலவு அல்ல, நமது அரசின் கடமை. இன்னும் சொன்னால் எனது கடமையாகவே நான் கருதுகிறேன். இந்த திட்டத்தை படிப்படியாக இன்னும் விரிவுபடுத்தி, முழுமையாக நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்வோம் என்று இந்த நேரத்தில் நான் உறுதி அளிக்கிறேன்.

சீரான வருகைப்பதிவு

இத்தகைய திட்டங்களை இலவசம் என்றோ, தர்மம் என்றோ, தானம் என்றோ, சலுகை என்றோ யாரும் நினைக்கக்கூடாது. இது ஒரு அரசினுடைய பொறுப்பாக அமைந்திருக்கிறது. அத்தகைய கடமை, பொறுப்புணர்வுடன்தான் இந்த திட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். பசிப்பிணி நீங்கிவிட்டால், மனநிறைவுடன் பிள்ளைகள் கல்வி கற்பார்கள். அவர்கள் மனதில் பாடங்கள் பதியும். பள்ளிக்கு ஆர்வத்துடன் வருவார்கள்.

சீரான வருகைப்பதிவு இருக்கும். தமிழ்நாட்டின் கல்விவளர்ச்சி விகிதம் அதிகமாகும். அனைவரும் அறிவாற்றல் பொருந்தியவர்களாக உயர்வார்கள். இப்படி எத்தனையோ நன்மைகளை இந்த மாநிலம் அடையப் போகிறது. எனவே இந்த திட்டத்திற்காக ஒதுக்கக்கூடிய பணத்தைச் நாங்கள் செலவாக நினைக்கவில்லை.

கருணையின் வடிவான அரசு

ஒரு மாணவருக்கு இன்று வழங்கும் உணவின் மதிப்பு 12 ரூபாயாக இருக்கலாம். ஆனால், அதனை உண்டு, சிறப்பான கல்வி கற்கக்கூடிய அந்த மாணவர் நாளைய தினம் மிகப்பெரிய பொறுப்பில் வந்து உட்கார்ந்தால் அவர் மூலமாக இந்தச் சமூகம் அடையும் பயன் என்பது அளவிட முடியாதது. என்னைப் பொறுத்தவரை கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும், பசிப்பிணி போக்கவும் உருவாக்கப்படும் திட்டங்கள் எந்த விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டவை.

அத்தகைய திட்டங்களைத்தான் ஒரு ஆட்சியின் முகமாக நான் பார்க்கிறேன். இந்த ஆட்சியை அளவிடும்போது, இது போன்ற திட்டங்களை மனதில் வைத்து அளவிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். கலைஞர் மகனின் அரசு, கருணையின் வடிவான அரசாகச் செயல்படும் என உறுதி அளிக்கிறேன்.

தாயுள்ளத்ேதாடு செயல்படுத்த வேண்டும்

இந்த நேரத்தில் அரசு அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் என்னுடைய அன்பான வேண்டுகோள். அரசானது தாயுள்ளத்தோடு இந்த திட்டத்தை தொடங்கி இருக்கிறது. நீங்களும் தாயுள்ளத்தோடு இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உங்கள் வீட்டுப்பிள்ளைகளுக்கு எத்தகைய கவனத்தோடும், கனிவோடும் உணவு வழங்குவீர்களோ, அதைவிடக் கூடுதல் கவனத்தோடும், கனிவோடும் வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புள்ள மாணவச் செல்வங்களே, உங்களுக்கு காலையும் மதியமும் உணவு வழங்குகிறோம். எனவே, நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். படியுங்கள்... படியுங்கள்...

இது ஒன்றுதான் என்னுடைய வேண்டுகோள். கல்வி நாம் போராடிப்பெற்ற உரிமை. படிப்பு ஒன்றுதான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து. அத்தகைய சொத்தை உங்களுக்கு நீங்களே சேர்த்துக் கொள்ளுங்கள்.

கல்வியைவிட்டு விலகாதீர்கள்

உங்களது மற்ற கவலைகளை போக்கவும், மற்ற தேவைகளை நிறைவு செய்யத்தான் இந்த அரசு செயலாற்றி கொண்டிருக்கிறது. நான் இருக்கிறேன். நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

நீங்கள் அறிவார்ந்த சமூகமாக முன்னேற இருப்பவர்கள். எந்த காரணத்தைக் கொண்டும் கல்வியை விட்டு விலகிச் சென்றுவிடாதீர்கள். விலகிச் செல்லவும் நான் விடமாட்டேன். பள்ளிக்கல்வி, உயர்கல்வி, பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நீங்கள் முன்னேறவேண்டும். நீங்கள் முன்னேறினால்தான் நம் தமிழ்ச்சமூகம் இன்னும் முன்னேறும்.

மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை

அந்த முன்னேற்றத்திற்காகத்தான் தி.மு.க. அரசியல் களத்திலும், ஆட்சிப்பொறுப்பிலும் செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

"பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க வாழ்க" என்கிறது மணிமேகலை காப்பியம். அத்தகைய மாநிலமாக தமிழ்நாடு அமைய எந்நாளும் உழைப்போம்.

தமிழ்ச் சமூகத்தினுடைய வறுமையை அகற்றிட, குழந்தைகளின் பசியைப் போக்கிட எந்த தியாகத்தையும் செய்திட நான் தயாராக இருக்கிறேன். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்ட போதிலும், முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

என் வாழ்வில் பொன் நாள்

"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..." என்று தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு, வரலாற்றில் நிலைத்து நிற்க கூடியதாகவும், ஏழை மக்களின் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை கொண்டுவரும் வகையிலான மாபெரும் திட்டத்தின் தொடக்க விழா இன்று நடந்திருக்கிறது.

எனது வாழ்வில் பொன் நாள் என்று சொல்லத்தக்கக்கூடிய வகையில் இந்த நாள் அமைந்திருக்கிறது. பசித்த வயிறுகளுக்கு உணவாக, தவித்த வாய்க்கு தண்ணீராக, திக்கற்றவர்களுக்கு திசைகாட்டியாக, யாருமற்றவர்களுக்கு ஆறுதலாக இருக்க போகும் கருணை வடிவான திட்டம்தான் இந்தக் காலை உணவு வழங்கும் திட்டம்.

பள்ளிக்குப் பசியோடு படிக்க வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்குச் செல்லக் கூடிய வசதியை நாம் ஏற்படுத்தி தந்திருக்கிறோம். தமிழ்நாடு இந்த ஆண்டு வரலாறு காணாத அளவு நெல் மற்றும் தானிய உற்பத்தியில் உச்சத்தைக் கண்டிருக்கிறது. மறுபுறம் யாரும் பசியால் வாடிடக் கூடாது என்பதற்காகத்தான் மதுரை நெல்பேட்டை சமையல் கூடத்தில் தயாரான உணவு, பிஞ்சுக்குழந்தைகளை தேடி பள்ளிகளுக்குச் செல்கின்றன.

இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களின் ஆதிமூலத்தை அறிந்து தீர்வுகள் காணப்பட வேண்டும். அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகத்தான் இன்று காலை உணவுத் திட்டத்தை ஆதிமூலம் தொடக்கப்பள்ளியில் இருந்து நாம் தொடங்கி இருக்கிறோம். இந்தப் பள்ளி அமைந்துள்ள இடம் கீழ் அண்ணா தோப்பு. என்ன பொருத்தம் பாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கமலாத்தாள் பாட்டிக்கு கவுரவம்

கோவையில் 1 ரூபாய்க்கு இட்லி வழங்கும் சமூக சேவகி கமலாத்தாள் பாட்டியை விழா மேடையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

அப்போது, "ஒரு நூற்றாண்டின் கல்விப் புரட்சி" என்ற சிறப்பு மலரை அவர் வெளியிட, அதனை கமலாத்தாள் பாட்டி பெற்றுக்கொண்டார்.

அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரியகருப்பன், கீதாஜீவன், மூர்த்தி, கணேசன், பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் அனிஷ்சேகர், வெங்கடேசன் எம்.பி., மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சமையல் கூடத்தை ஆய்வு

முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த திட்டத்திற்காக மாணவர்களுக்கு உணவு சமைக்கும் நெல்பேட்டை சமையல் கூடத்தை பார்வையிட்டார். மேலும் பள்ளிகளுக்கு காலை உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


Related Tags :
Next Story