அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
கூடலூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
கூடலூர் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த பகுதியில் 2-ம் போக நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. 51 என்.எல்.ஆர் ரக நெல்களை விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். வெட்டுக்காடு பகுதியில் நெல் அறுவடை பணிகள் எந்திரங்கள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் கூடலூர் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று நீரினைப் பயன்படுத்துவோர் சங்க விவசாயிகள், தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதை ஏற்று கூடலூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் கூடலூர் வேளாண் மையம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் புதிதாக திறக்கப்பட்டது. 'ஏ' ரகம் நெல் 100 கிலோ ரூ.2 ஆயிரத்து 160-க்கும், பொது ரகம் நெல் 100 கிலோ ரூ.2 ஆயிரத்து 115-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.விவசாயிகள் அறுவடை செய்த நெல்களை டிராக்டர் வண்டிகள் மூலம் அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். கூடலூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.