முத்துராமலிங்க தேவர் மணிமண்டபம் திறப்பு விழா


முத்துராமலிங்க தேவர் மணிமண்டபம் திறப்பு விழா
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டத்தில் முத்துராமலிங்க தேவர் மணிமண்டபம் திறப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டத்தில் முத்துராமலிங்க தேவர் மணிமண்டபம் திறப்பு விழா நடந்தது.

வெண்கல சிலையுடன் மணிமண்டபம்

ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் அருகில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை, கடந்த 1985-ம் ஆண்டு கெட்டியம்மாள்புரத்தை சேர்ந்த ராமையா தேவரால் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தில் மணிமண்டபம் அமைத்து முத்துராமலிங்க தேவருக்கு வெண்கல சிலை நிறுவ வேண்டும் என அ.தி.மு.க ஆட்சியில் அப்போதைய அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனிடம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவைகுண்டம் சுரேஷ் தேவர் தலைமையில் கோரிக்கை மனு வழங்கினர்.

இதையடுத்து முத்துராமலிங்க தேவரின் பழைய சிமெண்டு சிலைக்கு பதிலாக வெண்கல சிலையுடன் மணிமண்டபம் அமைத்திட ஏற்பாடு செய்யப்பட்டது. கெட்டியம்மாள்புரத்தை சேர்ந்த ராமையா தேவர் மகன்களும், தொழிலதிபர்களுமான ஏ.ஆர்.காசி பாண்டியன், ஏ.ஆர்.ராமசுப்பிரமணியன் ஆகியோர் வெண்கல சிலை அமைப்பதற்கும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் முத்துராமலிங்க தேவர் மணிமண்டபம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தொடர்ந்து முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலையுடன் மணிமண்டபம் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது.

திறப்பு விழா

தொழிலதிபர்கள் ஏ.ஆர்.காசி பாண்டியன், ஏ.ஆர்.ராமசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல் வரவேற்று பேசினார். அ.தி.மு.க அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவரின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்து பேசினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

விழாவில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. முருகையா பாண்டியன், முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ, அமைப்பு செயலாளர் சின்னத்துரை, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, நெல்லை முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ, அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா,

அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில இளைஞரணி தலைவர் சுரேஷ்தேவர், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. நகர செயலாளர் காசிராஜன் நன்றி கூறினார்.


Next Story