பாளையங்கோட்டையில் புதிய மின்மாற்றி திறப்பு
பாளையங்கோட்டையில் புதிய மின்மாற்றி தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின்பகிர்மான வட்டம் நெல்லை நகர்ப்புற மின்கோட்டம் வண்ணார்பேட்டை பிரிவுக்கு உட்பட்ட பாளையங்கோட்டை தெற்கு பஜார் லூர்து நாதன் சிலை அருகில் ரூ.5 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழாவில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நகர்ப்புற மின்வினியோக செயற்பொறியாளர் முத்துக்குட்டி, உதவி செயற்பொறியாளர்கள் எட்வர்ட் பொன்னுசாமி, சங்கர், வண்ணார்பேட்டை உதவி மின்பொறியாளர் முத்துராமலிங்கம், உதவி மின்பொறியாளர் (கட்டுமான பிரிவு-2) ஜன்னத்துல் சிபாயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்த புதிய மின்மாற்றியால் பாளையங்கோட்டை தெற்கு பஜார், பெருமாள் மேலரதவீதி மற்றும் வடக்கு ரதவீதி பகுதிகளுக்கு சீரான மின்சாரம் கிடைக்கும். மின்தடை நேரமும் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.