நகர்புற நலவாழ்வு மைய கட்டிட திறப்பு விழா
திருவாரூர், மன்னார்குடியில் நகர்புற நலவாழ்வு மைய கட்டிட திறப்பு விழா
கொரடாச்சேரி:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் பேரவை விதிகள் 110-ன் கீழ் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் 708 நகர்புற சுகாதார நலவாழ்வு மையங்கள், நகர்புற மக்களின் நலனை காப்பதற்காக அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். முதற்கட்டமாக 500 நகர்புற நலவாழ்வு மையங்களை காணொலி காட்சி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகராட்சி கொடிக்கால்பாளையம் மற்றும் மன்னார்குடி நகராட்சி குட்டகரை ஆகிய இரண்டு இடங்களில் நகர்புற நலவாழ்வு மையங்கள் கட்டப்பட்டது. இந்த மையங்களை நேற்று மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து திருவாரூரில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ புதிய கட்டிடத்தில் குத்து விளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் நாகை செல்வராஜ் எம்.பி., திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி.கலைவாணன், திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியா மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.