இடைவிடாமல் பெய்த மழை
கடலூர் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வட இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாமல் நேற்று மாலை வரை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதில் அவ்வப்போது விட்டுவிட்டு கனமழையாகவும் பெய்தது. இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
மக்கள் பாதிப்பு
இடைவிடாமல் பெய்த மழையால் தள்ளுவண்டி வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் மஞ்சக்குப்பத்தில் உள்ள உழவர் சந்தையில் கடை வைத்துள்ள விவசாயிகள் மற்றும் சாலையோரம் கடை வைத்து வியாபாரம் செய்தவர்கள் கடும் சிரமமடைந்தனர். மேலும் இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி என மாவட்டம் முழுவதும் இடைவிடாமல மழை தூறிக் கொண்டே இருந்தது. நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 36.2 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக விருத்தாசலத்தில் ஒரு மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
முறிந்து விழுந்த மரக்கிளை
இந்த நிலையில் நேற்று காலை கடலூரில் மழை பெய்து கொண்டிருந்த போது கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் இருந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று திடீரென முறிந்து சாலையில் விழுந்தது. அந்த சமயத்தில் அவ்வழியாக வாகனங்கள் ஏதும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் அந்த மரக்கிளையை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அப்புறப்படுத்தினர். பண்ருட்டி பகுதியில் பெய்த மழையால் கும்பகோணம் சாலையில் உள்ள கெடிலம் ஆற்றுப் பாலத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. வங்க கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக முடசல்ஓடை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் மீன் இறங்கும் தளம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.