எடப்பாடி பகுதியில் தொடர் மழை:பொங்கல் பானை தயாரிக்கும் பணி பாதிப்பு
எடப்பாடி பகுதியில் தொடர் மழையால் பொங்கல் பானை தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
எடப்பாடி,
பொங்கல் பண்டிகை
தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு மற்றும் கரும்பு. இதேபோல் பொங்கல் பானை, மஞ்சள், பனைக்கிழங்கு, காப்புக்கட்டும் பூ ஆகியவையும் நம் அனைவரின் நினைவுக்கு வந்து செல்லும். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையன்று அதிகாலையில் புது பானையில் பொங்கல் சமைத்து, சூரியனுக்கு படைத்து வழிபடுவது பொதுமக்களின் வழக்கமாக உள்ளது.
இதற்காக பொங்கல் பானை உற்பத்தி தற்போது தீவிரமடைந்து வருகிறது. இதேபோல் கரும்பு, மஞ்சள் போன்றவையும் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. வழக்கத்தை விட வருகிற பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகிறார்கள்.
பானை தயாரிப்பு
சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, ஓமலூர், தேவூர், தலைவாசல், ஆத்தூர், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். எடப்பாடு அருகே மேல்சித்தூர், மேட்டுத்தெரு, குலாலர் தெரு, குருக்கப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அகல் விளக்கு, குடிநீர் பானை, பொங்கல் பானை உள்ளிட்ட வீட்டு உபயோகங்களுக்கு தேவையான மண்பாண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்டங்கள் சேலம் மாவட்டம் மட்டுமின்றி, நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு சில வியாபாரிகள் மண்பாண்டங்கள் செய்யும் இடங்களுக்கே நேரடியாக சென்று, பானைகளை கொள்முதல் செய்து வருகிறார்கள்.
தொடர்மழை
இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த பகுதி மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பானை தயாரிக்கும் பணியில் மாணவ-மாணவிகளும் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக எடப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொங்கல் பானை தயாரிக்கும் பணி தடைப்பட்டு தொழிலாளர்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தயாரித்த பொங்கல் பானைகளை சுட வழியின்றி, வீடுகளில் அடுக்கி வைத்துள்ளனர். இதனால் அவை சேதமாகி, நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பானை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
தொடர் மழை காரணமாக பொங்கல் பானை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது குறித்து எடப்பாடி பகுதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
வாழ்வாதார பாதிப்பு
மேல்சித்தூர் பகுதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர் பீமன்:-
கடந்த காலங்களை விட தற்போது மண்பாண்ட பொருட்களின் விற்பனை கணிசமாக குறைந்து வருகிறது. இந்தநிலையில் ஆண்டுதோறும் வரும் பொங்கல் பண்டிகை தினத்தில், எங்கள் பகுதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் அதிகளவில் பொங்கல் பானைகளை தயார் செய்து விற்பனை செய்வது வழக்கம். வருகிற பொங்கல் பண்டிகைக்கு இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், திடீரென இந்த பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
இதனால் பொங்கல் பானைகளை தயாரிக்க முடியாமல், மண்பாண்ட தொழிலாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கிறோம். அடுத்த சில தினங்களுக்கு மழை தொடரும் நிலையில், உரிய காலத்தில் தேவையான பொங்கல் பானைகளை தயார் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்படும். இதனால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
உரிய நிவாரணம்
பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சத்தியவாணி:-
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று தாக்கத்தால் பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொங்கல் பானைகளை உற்பத்தி செய்தும், அதனை விற்பனை செய்ய முடியாத நிலை காரணமாக எங்களது வருமானம் வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக வழக்கமான வருவாயும் எங்களுக்கு கிடைக்கவில்லை.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் உற்சாகமாக தயாராகி வரும் நிலையில், பொங்கல் பானை உற்பத்தியில் நாங்கள் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வந்தோம். இதற்காக மூலப்பொருட்களை வாங்கி அதிகளவில் இருப்பு வைத்துள்ளோம்.
ஆனால் தற்போது எடப்பாடி பகுதியில் பெய்து வரும் மழையால் பானை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
கடும் ஏமாற்றம்
மண்பாண்ட தொழிலாளர் கார்த்தி:-
இந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் பெய்த பருவமழை காரணமாக ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருகில் உள்ள ஏரிகளில் பொங்கல் பானைகள் தயாரிக்க தேவையான வண்டல் மண் சேகரிக்க முடியவில்லை. இதனால் நாங்கள் தொலைதூரம் சென்று வண்டல் மண் சேகரித்து, மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வந்தோம்.
இந்த ஆண்டு பொங்கல் பானை உற்பத்தி அதிகளவில் இருக்கும் என்று நம்பியே நாங்கள் போக்குவரத்து செலவை பொருட்படுத்தாது, தொலை தூரங்களுக்கு சென்று வண்டல் மண் எடுத்து வந்தோம். ஆனால் தற்போது தொடர்ச்சியாக பெய்து வரும் மழை எங்களுக்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தயாரித்த பொங்கல் பானைகளை சுட வழியின்றி வீடுகளுக்குள் அடுக்கி வைத்துள்ளோம். மேலும் சுட்ட பானைகளில் வர்ணம் பூச முடியவில்லை.
இதன் காரணமாக பொங்கல் பானை விற்பனை அதிகளவில் இருக்கும் என்று நம்பிக்கையில் இருந்த நாங்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இதனால் வருவாய் இழப்பு மற்றும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி எங்களை காக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பொங்கல் பானை தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர். அவர்களின் கவலையை போக்க வருண பகவான் வழிவிடுவாறா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.