இடைவிடாது பெய்த மழை
திருச்சியில் 2-வது நாளாக இடைவிடாது மழை பெய்தது.
இடைவிடாது பெய்த மழை
திருச்சி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் நேற்று முன்தினம் பகலில் தொடங்கிய மழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருகிறது. திருச்சி மாநகரில் நேற்று காலை 8 மணிக்கு லேசான தூறலுடன் மீண்டும் தொடங்கி பின்னர் பலத்த மழை கொட்டியது.
சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையை தொடர்ந்து, மாலை 3 மணி வரை அவ்வப்போது பலத்த மழையாகவும், பின்னர் சாரலாகவும் இடைவிடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது. காலையிலேயே மழை பெய்யத்தொடங்கியதால் பள்ளி மாணவர்கள் பலர் நனைந்து கொண்டே பள்ளிக்கு சென்றதை காண முடிந்தது.
சேறும், சகதியுமான சாலைகள்
திருச்சியில் நேற்று வெயிலே தெரியாத வகையில் விட்டு, விட்டு தொடர்ந்து பெய்த மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது. ஒரு பக்கம் மழையால் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு புறம் சற்று பாதிப்படைந்து மக்கள் அவதியடையவும் செய்தனர்.
திருச்சி மாநகரில் பல இடங்களில் ஆங்காங்கே சாலைப்பணிகள், பாதாள சாக்கடைப்பணிகள் நடந்து வருவதால், சாலைகள் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக கிடக்கிறது. இந்த நிலையில் மழையும் விடாமல் கொட்டியதால் அந்த சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக மாறின. இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்வோரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
வியாபாரிகள் பாதிப்பு
சாலையோர வியாபாரிகள் இந்த மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டனர். திருச்சி காந்திமார்க்கெட், மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், என்.எஸ்.பி. சாலை, பெரியகடை வீதி மற்றும் தெப்பக்குளம் பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் மிகவும் அவதி அடைந்தனர். அவர்கள் குடைகளை பிடித்தபடி வியாபாரம் செய்தாலும், பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை மொத்தம் 186.8 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக தென்புறநாடு, பொன்மலை பகுதியில் 25 மில்லிமீட்டர் மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 7.78 மில்லி மீட்டர் மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.