சிதம்பரம் பகுதியில் பெய்த தொடர் மழை:அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிப்புவிவசாயிகள் கவலை
சிதம்பரம் பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. அதேபோன்று பல இடங்களில் அறுவடை பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது.இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், சிதம்பரம் அருகே கொடிப்பள்ளம், தில்லைவிடங்கன், பின்னத்தூர் மேற்கு ஆகிய பகுதிகளில் பல ஏக்கர்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து போனது. இதனால் அறுவடை எந்திரங்கள் கொண்டு, அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் சில இடங்களில் வயலில் மழைநீர் தேங்கி நிற்பதால், சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்களில் உள்ள கதிர்கள் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று மேலும் பல கிராமங்களில் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால், அவர்கள் கவலையடைந்துள்ளனர்.
கணக்கெடுப்பு பணி
தற்போது, டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு கணக்கெடுப்பு பணியை தொடங்கிஉள்ளது. இதபோன்று கடலூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.