கோத்தகிரியில் தொடர் மழை:ஈளாடா தடுப்பணை நிரம்பியது
கோத்தகிரியில் தொடர் மழை காரணமாக ஈளாடா தடுப்பணை நிரம்பியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோத்தகிரி
கோத்தகிரியில் தொடர் மழை காரணமாக ஈளாடா தடுப்பணை நிரம்பியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈளாடா தடுப்பணை
கோத்தகிரி அருகே கோடநாடு ஈளாடா கிராமப்பகுதியில் சுமார் 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும், சராசரியாக 9 முதல் 12 அடி ஆழமும் கொண்ட தடுப்பணை அமைந்துள்ளது. மலைப்பகுதியில் உள்ள இயற்கை ஊற்றுகளில் வரும் தண்ணீர் தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் மூலம் கோத்தகிரி நேரு பூங்கா நீர் உந்து நிலையத்திலுள்ள தொட்டிகளில் தேக்கி வைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி தடுப்பணை நீரை நம்பி, தடுப்பணைக்கு அருகே உள்ள விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறிகளைப் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
உபரிநீர் வெளியேற்றம்
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக கோடநாடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக ஈளாடா தடுப்பணை முழுக் கொள்ளளவை எட்டி உள்ளதுடன், தடுப்பணை நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது. தற்போது கோத்தகிரி மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மாற்று திட்டமாகக் கொண்டு வரப்பட்ட அளக்கரை குடிநீர் திட்டத்தில் நீர் உந்து அறைகளில் ஏற்பட்டு வரும் மின் அழுத்தக் குறைபாடு காரணமாக மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாவதால், குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி நகர மக்களின் குடிநீர்த் தேவையை பல ஆண்டுகளாகப் பூர்த்தி செய்து வரும் ஈளாடா தடுப்பணை தற்போது முழுக் கொள்ளளவை எட்டி உள்ளதால் கோத்தகிரி நகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.