இடைவிடாது பெய்யும் மழை - சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது...!
சென்னையில் சராசரியாக பல இடங்களில் 7-8 செ.மீ மழை பெய்துள்ளது. வில்லிவாக்கத்தில் தான் அதிகமாக மழை பெய்துள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவக்காற்றின் தீவிரம் காரணமாக சென்னையில் கொட்டும் கனமழை கொட்டி வருகிறது. பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் நீச்சல் குளம் போல் மழை நீர் தேங்கி உள்ளது.சென்னை ஐகோர்ட்டு சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை, மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் சென்னை மாநகராட்சி ஊழியர்கள். தொடர் மழையால் கிண்டி - கோயம்பேடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
எழும்பூர் தமிழ் சாலை, நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாரிமுனை, வடபழனி, மயிலாப்பூர் முசிறி சுப்ரமணியன் சாலை, கோயம்பேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் வாகனங்களை இயக்க முடியாமல், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், இடைவிடாது பெய்த மழையின் காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. கே.கே.நகர், அசோக் நகர் 6 வது அவின்யூ, ஜிபி சாலை, புளியந்தோப்பு, டிகாஸ்டர் சாலை, டிமெல்லோஸ் சாலை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை , பட்டாளம், சூளை மேடு, 25 வார்டு 200 அடி சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது.
நீலாங்கரை கபாலீஸ்வரர் சாலை, 195 வார்டு ஈஞ்சம்பாக்கம் ராஜன் நகர், 200 வார்டு ஜவகர் நகர், 198 விப்ரோ தெரு, 193 வார்டு சக்தி நகர் துரைபாக்கம், 168 வார்டு தனகோடி ராஜ தெரு உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.