மணல் கடத்தலை தடுத்ததால் நடந்த சம்பவம்:கிராம நிர்வாக அலுவலர் கொலையை தினமும் விசாரித்து 2 மாதத்தில் முடிக்க வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு கெடு
மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலர் கொலை சம்பவம் குறித்த வழக்கை தினமும் விசாரித்து 2 மாதத்தில் முடிக்க மதுரை ஐகோர்ட்டு கெடு விதித்து உத்தரவிட்டது.
மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலர் கொலை சம்பவம் குறித்த வழக்கை தினமும் விசாரித்து 2 மாதத்தில் முடிக்க மதுரை ஐகோர்ட்டு கெடு விதித்து உத்தரவிட்டது.
கொலை வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பொன் காந்திமதிநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக லூர்து பிரான்சிஸ் என்பவர் நேர்மையாக பணியாற்றினார். ஏற்கனவே மணல் அள்ளுவதற்கு பல்வேறு பகுதிகளில் தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அந்த உத்தரவை நிறைவேற்றும் பொருட்டு, தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நடக்கும் மணல் கடத்தலை தடுக்கும்படி முறப்பநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கிடையே அவருக்கு மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வந்தது. எனவே தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை வைத்தார். அதையும் போலீசார் செய்யவில்லை. இந்தநிலையில்தான், பட்டப்பகலில் அவரது அலுவலகத்திலேயே லூர்து பிரான்சிஸ் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
விசாரணையை மாற்றுங்கள்
இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணல் கடத்தல் கும்பலிடம் முறப்பநாடு போலீசார் லஞ்சம் பெற்றுக் கொண்டு, லூர்து பிரான்சிஸ் அளித்த புகார்களை கிடப்பில் போட்டு உள்ளனர். மணல் கடத்தல்காரர்களுக்கு சாதகமாகவும் செயல்பட்டு வந்தனர்.
எனவே உள்ளூர் போலீசார் இந்த வழக்கை விசாரித்தால் உண்மை வெளிப்படாது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல்கள் பினேகாஸ், விக்டோரியா ஆகியோர் ஆஜராகி, கொடூர கும்பலால் கொல்லப்பட்ட லூர்து பிரான்சிஸ், ஏற்கனவே ஆதிச்சநல்லூரில் பணியாற்றியபோது தொல்லியல் பகுதிகளை சிலர் ஆக்கிரமித்ததாக புகார் செய்ததால், அவரை கொல்ல முயற்சிகள் நடந்தன. அப்போதும் பாதுகாப்பு கேட்டு போலீசில் புகார் தெரிவித்தும் போலீசார் கண்டுகொள்ளவில்லை. இந்த சம்பவத்துக்கு போலீசாரின் மெத்தனம்தான் காரணம். எனவே இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்று வாதாடினர்.
2 மாதத்தில் முடிக்க கெடு
அப்போது அரசு வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கை விசாரிக்க போலீஸ் துணை சூப்பிரண்டை நியமித்து தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை முறையாக நடந்து வருகிறது. இந்த கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த வழக்கில் இன்னும் ஒரு மாதத்தில் விசாரணை முடிந்து, அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர் இந்த கொலை சம்பவம் பற்றிய விசாரணை தொடர்பாக போலீஸ் துணை சூப்பிரண்டுவின் தற்போதைய நிலை அறிக்கையையும் நீதிபதிகளிடம் அரசு வக்கீல் தாக்கல் செய்தார்.
விசாரணை முடிவில் நீதிபதிகள், இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இது மொத்த மாநிலத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. எனவே இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையை, 4 வாரத்தில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பேரில் இந்த வழக்கை மாவட்ட கோர்ட்டு விசாரிக்கும்படி 3 வாரத்தில் மாஜிஸ்திரேட்டு பரிந்துரைக்க வேண்டும். பின்னர் தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டு, இந்த வழக்கை நாள்தோறும் விசாரணை நடத்தி 2 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று கெடு விதித்து உத்்தரவிட்டனர்.