பிரபல ஷூ தொழிற்சாலை, நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை


பிரபல ஷூ தொழிற்சாலை, நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
x

ஆம்பூர், வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் பிரபல நிறுவனங்களுக்கு சொந்தமான ஷூ தொழிற்சாலைகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

ஆம்பூர், வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் பிரபல நிறுவனங்களுக்கு சொந்தமான ஷூ தொழிற்சாலைகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

30 கார்களில் வந்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மோட்டுக்கொல்லை, துத்திப்பட்டு, பேரணாம்பட்டு சாலை, அம்பேத்கர் நகர், அயித்தம்பட்டு, பாங்கி ஷாப், மாதனூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரிதா குரூப்ஸ் நிறுவனங்ளுக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை, ஷூ கம்பெனிகள், ஷூ உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் என 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் ஷூ, பெல்ட், பர்ஸ், கைப்பை, டிராவல்பேக் உள்ளிட்ட தோல் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடந்ததாக புகார்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காலை சுமார் 7 மணி அளவில் வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணபிரசாத் தலைமையிலான வருமானவரித்துறையினர் 80-க்கும் மேற்பட்டோர் 30 கார்களில் வந்தனர்.

அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இந்த பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான தோல் தொழிற்சாலை, ஷூ கம்பெனிகளில் தொழிலாளர்களை மட்டும் அனுமதித்தனர்.

கதவை பூட்டி சாவிகளை வாங்கினர்

பின்னர் கதவை பூட்டி சாவிகளை தங்கள் வசம் வைத்துக் கொண்டனர். மேலும் நிறுவன மேலாளர்கள் அலுவலர்களின் செல்போன்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தொழிலாளர்கள் மூலம் தகவல்கள் வெளியே பரவுவதை தடுக்க ஜாமர் கருவி பொருத்தியுள்ளனர். வெளி ஆட்கள் யாரும் உள்ளே வராதபடி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.ஆம்பூர் பகுதியில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர். அவர்கள் மேற்கண்ட நிறுவனங்களில் உள்ள பதிவேடுகள், கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்து சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால் சோதனையில் கிடைத்த தகவல்கள் எதையும் அவர்கள் வெளியிடவில்லை. சோதனை இரவு வரை நீடித்தது.

வேலூர்

வேலூரை அடுத்த பெருமுகையில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் கே.எச்.எக்ஸ்போட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் ஷூ தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். காலை 7 மணிக்கு தொழிலாளர்கள் வழக்கம்போல் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில் 7.30 மணியளவில் கர்நாடக பதிவெண் கொண்ட 2 கார்கள் மற்றும் தமிழக பதிவெண் கொண்ட ஒரு கார் என்று மொத்தம் 3 கார்களில் சென்னையை சேர்ந்த வருமான வரித்துறையினர் 8 பேர் ஷூ தொழிற்சாலைக்குள் வந்தனர்.

முதற்கட்டமாக தொழிற்சாலையின் நுழைவு வாயிற் கதவுகள் மூடப்பட்டன. வெளியாட்கள் யாரும் உள்ளேயும், தொழிற்சாலையில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்க கூடாது என்று காவலாளிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து தொழிற்சாலை அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் வரிமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். காலை 7.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் பகுதியில் அமைந்துள்ள கே.எச்.குழும நிறுவனத்துக்கு 10-க்கும் மேற்பட்ட கார்களில் 30-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர்.

அவர்கள் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 8 மணி அளவில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலை மற்றும் ஏற்றுமதி நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். காலை 8 மணியளவில் தொடங்கிய இச்சோதனை நேற்று மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது.

ஆவணங்கள் சிக்கியதா?

சோதனை குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. சோதனை அனைத்தும் முடிந்த பின்னரே வரி ஏய்ப்பு செய்தது எவ்வளவு என்றும், முக்கிய ஆவணங்கள் சிக்கியதா என்பதும் தெரிய வரும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



Next Story