ஈரோட்டில் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
ஈரோட்டில் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
ஈரோடு
ஈரோட்டில் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
கட்டுமான நிறுவனம்
கோவை, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய நிறுவனங்களில் கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமான கோவ வடவள்ளியை சேர்ந்த என்ஜினீயர் சந்திரசேகர் என்பவரது வீடு, அலுவலகத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ஈரோடு பெரியார் நகரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் நேற்று ஈரோடு வருமான வரித்துறையை சேர்ந்த 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினர்.
சோதனை
ஈரோட்டில் சோதனை நடத்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் கிளை அலுவலகம் பெரியார் நகரில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது.கடந்த ஓராண்டுக்கு முன்னர் கொரோனா காலகட்டத்தின் போது, இந்த கிளை அலுவலகம் காலி செய்யப்பட்டது. ஆனாலும் அலுவலகம் மூடப்படவில்லை. ஓரிரு ஊழியர்கள் மட்டும் கவனித்து வந்துள்ளனர். நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது அலுவலகத்தில் எவ்வித ஆவணங்களும் கிடைக்கவில்லை. கோவையில் நடத்தப்பட்ட சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஈரோடு கிளை அலுவலகத்தின் முகவரி அடங்கிய சில ஆவணங்கள் இருந்ததால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.