கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 815 கனஅடியாக அதிகரித்தது.
கிருஷ்ணகிரி:
மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெப்ப சலனம் காரணமாக, கடந்த ஓரிரு நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால், கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
கெலவரப்பள்ளி அணையில் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 11 தடுப்பணைகளை கடந்து கிருஷ்ணகிரி அணைக்கு வருகிறது. தற்போது தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகம் உள்ளதால் எண்ணேகொல்புதூர் தடுப்பணையில் ரசாயன நுரை பொங்க தண்ணீர் வெளியேறி வருகிறது.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்த தண்ணீர் மாதேப்பட்டி வழியாக கிருஷ்ணகிரி அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 280 கனஅடியாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 815 கனஅடியாக அதிகரித்தது. மேலும், அணையின் உச்சநீர்மட்டமான 52 அடியில் 50.50 அடிக்கு தண்ணீர் உள்ளதால், அணையில் இருந்து வினாடிக்கு 317 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி மழையளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-
தேன்கனிக்கோட்டை- 53, கிருஷ்ணகிரி-7.20, பெனுகொண்டாபுரம்-3.20, சூளகிரி- 2, போச்சம்பள்ளி-2.20.