மாடுகள் திருட்டு அதிகரிப்பு; விவசாயிகள் கவலை


மாடுகள் திருட்டு அதிகரிப்பு; விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 7:31 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்காடு பகுதியில் மாடுகள் திருட்டு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு பகுதியில் மாடுகள் திருட்டு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதனர்.

மாடுகள் திருட்டு

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு மற்றும் அதனை சுற்றி நாங்கூர், மங்கை மடம், திருவாலி, பெருந்தோட்டம், திருநகரி, கீழ சட்டநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. மேற்கண்ட பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகிறது. மேலும் வீடுகள் தோறும் விவசாயிகள் கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பசு மாடுகள் அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமாக பால் உற்பத்தி விளங்குகிறது.

மேற்கண்ட பகுதிகளில் உற்பத்தியாகும் பாலை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன. தற்போது மாடுகளின் விலையும் அதிகரித்து காணப்படுவதால் விவசாயிகள் பசுமாடுகள் வளர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திடீர் திடீரென பசுமாடுகள் திருடப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோரிக்கை

இதுகுறித்து மாடுகளை இழந்த விவசாயிகள் கூறுகையில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோம். கடந்த சில ஆண்டுகளாக பருவம் தவறிய மழையின் காரணமாக விவசாயத்தில் மிகுந்த நஷ்டப்படுவதால், அதனை ஈடு கொடுத்திட கால்நடைகள் எங்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக பசு மாடுகள் திருடப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

நாங்கூர் கிராமத்தில் கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் திருடப்பட்டுள்ளன. அதேபோல் பல கிராமங்களில் திருட்டுக்கள் நடந்து வருகிறது. இது குறித்து திருவெண்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். திருடப்பட்ட பசு மாடுகள் இதுவரை மீட்கப்படவில்லை. இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வேதனையை அளித்துள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு குழுவை அமைத்து திருடப்பட்ட பசு மாடுகளை கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்றார்.


Next Story