அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப் படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதன்மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
சென்னை,
மத்திய அரசு ஊழியர் களுக்கு அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் உயர்த்தி 38 சதவீதமாக கடந்த ஆண்டு (2022) ஜூலை 1-ந்தேதி முதல் ரொக்கமாக வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அகவிலைப்படி உயர்வு
தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4 சதவீதம் உயர்த்தி 38 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 1-ந்தேதி முதல் 38 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். புத்தாண்டு பரிசாக இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
நிதி நெருக்கடி
அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.
முந்தைய அரசு விட்டு சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.
38 சதவீதமாக உயர்வு
இந்த வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயர்வினை 1.1.2023 முதல் செயல்படுத்திட இந்த அரசு முடிவு எடுத்துள்ளது. இதன்படி, தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும்.
இதனால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2,359 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி இந்த நிதிச்சுமையை அரசு ஏற்றுள்ளது.
குழு அமைப்பு
மேலும் சம வேலை, சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடி வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித்துறை செயலாளர் (செலவினம்) தலைமையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும்.
இந்த குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து இந்த கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பினை ஏற்று, 2023-ம் ஆண்டின் தொடக்கத்தினை உவகையுடன் கொண்டாடி மக்கள் வாழ்வை வளம் பெற செய்வதற்கான பெரும் பணியில் அரசுடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
16 லட்சம் ஊழியர்கள்
இதற்கு முன்பு, தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜூலை 1-ந்தேதி 3 சதவீதம் உயர்த்தப்பட்டதால் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக வழங்கப்பட்டு இருந்தது.
தற்போது 4 சதவீதம் உயர்வதால் இது 34-ல் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் 16 லட்சம் ஊழியர்கள் பயன்பெற உள்ளனர்.
எவ்வளவு கிடைக்கும்?
அகவிலைப்படி உயர்வு அறிவிப்பின் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் எவ்வளவு உயரும்? என்ற விவரம் வெளியாகி உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் (என்.ஜி.ஓ.) மு.அன்பரசு கூறியதாவது:-
மத்திய அரசு 6 மாதத்திற்கு முன்பு அறிவித்த அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்று எதிர்பார்த்து இருந்தோம். இப்போது கிடைத்துள்ளது. அரசு ஊழியர்களில் ரூ.15,700 குறைந்த பட்ச சம்பளம் பெறும் அலுவலக உதவியாளர், வாட்ச்மேன் உள்ளிட்டோருக்கு அகவிலைப்படி ரூ.628 சம்பளமாக உயரும்.
ரூ.11 ஆயிரம் வரை
ரூ.50 ஆயிரம் சம்பளம் பெறுகிறவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வரை சம்பளம் உயரும். அதிகாரிகள் மட்டத்தில்ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 900 சம்பளம் வாங்குபவர்களுக்கு ரூ.5,156 சம்பளம் உயரும். இதில் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் மூத்த அதிகாரிகளுக்கு ரூ.11 ஆயிரம் வரை சம்பளம் உயரக்கூடும்.
அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களில் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு ரூ.120 சம்பளம் கூடும். இந்த பிரிவில் அதிகபட்ச சம்பளம் பெறுகிறவர்களுக்கு ரூ.444 வரை சம்பளம் கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.