மான்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கோத்தகிரி வனப்பகுதியில் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரி வனப்பகுதியில் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
4 மான் இனங்கள்
நீலகிரி மாவட்டமானது 65 சதவீத வனப்பகுதியுடன் முக்கிய உயிர்ச்சூழல் மண்டலமாக விளங்குகிறது. இங்குள்ள வனப்பகுதிகளில் புலி, காட்டுயானை, சிறுத்தை, செந்நாய், கரடி, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதை சுற்றியுள்ள சீகூர், சிங்காரா, தெங்குமரஹாடா வனப்பகுதிகளில் புள்ளி மான், கடமான், சுருள் கொம்பு மான், குரைக்கும் மான் ஆகிய 4 இன மான்கள் காணப்படுகின்றன. அங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் மான்களை எளிதில் பார்க்க முடியும். ஆனால் முதுமலையில் இருந்து நீண்ட தொலைவில் உள்ள கோத்தகிரி பகுதியில் மான்கள் தென்படுவது அரிதானதுதான்.
சாலையோரங்களில் மேய்ச்சல்
ஆனால் தற்போது கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் கட்டபெட்டு பகுதியிலும், லாங்வுட் சோலை மற்றும் அதை சுற்றியுள்ள மிளிதேன் செல்லும் சாலையோரங்களிலும் அடிக்கடி ஏராளமான புள்ளிமான்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மேய்ச்சலில் ஈடுபடும்போது தென்பட்டு வருகின்றன. குறிப்பாக கட்டபெட்டில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் பேரார், மடிதொரை, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் அடிக்கடி கடமான்களை காண முடிகிறது.
மகிழ்ச்சி
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்ததால் வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி உள்ளதுடன், சலையோரங்களிலும் புற்கள் அதிகளவு வளர்ந்து காணப்படுகின்றன. எனவே அவற்றை மேய்வதற்காக மான்கள் வனப்பகுதிகளில் இருந்து வெளியே வருகின்றன. அதுவும் கோத்தகிரி பகுதியில் அதிகளவில் மான்கள் தென்படுவது, அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதை காட்டுகிறது. இதனால் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.