மீன்பிடி தடைகாலம் என்பதால்வெளிமாநிலங்களில் முட்டை விற்பனை 50 சதவீதம் அதிகரிப்பு


மீன்பிடி தடைகாலம் என்பதால்வெளிமாநிலங்களில் முட்டை விற்பனை 50 சதவீதம் அதிகரிப்பு
x

ஆழ்கடலில் மீன்பிடிக்க தடைகாலம் அமலில் உள்ளதால், தேவை அதிகரித்து வெளிமாநிலங்களில் முட்டை விற்பனை 50 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக, தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழுவின் நாமக்கல் மண்டல துணைத்தலைவர் சிங்கராஜ் கூறினார்.

நாமக்கல்

பண்ணையாளர்கள் சந்திப்பு

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின் நாமக்கல் மண்டலம் சார்பில் நேற்று பண்ணையாளர்கள் சந்திப்பு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மண்டல துணை தலைவர் சிங்கராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ், தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன தலைவர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் ரொக்க தள்ளுபடி மற்றும் வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நபர்களுக்கு மட்டுமே முட்டையை விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் மண்டல துணைத்தலைவர் சிங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 1-ந் தேதி முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு என்ன விலை அறிவிக்கிறதோ அந்த விலைக்குதான் பண்ணையில் முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து கோழிப்பண்ணையாளர்களும், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கும் விலைக்குத்தான் முட்டையை விற்பனை செய்கின்றனர். அதேபோல் வியாபாரிகளும் அந்த விலைக்குத்தான் கொள்முதல் செய்கின்றனர்.

50 சதவீதம் அதிகரிப்பு

கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலம் மற்றும் தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு செல்லும்போது, தூரத்துக்கு ஏற்ப போக்குவரத்து செலவு, ஏற்று, இறக்கு கூலி கணக்கிட்டு, கூடுதலாக விலை நிர்ணயம் செய்திருக்கிறோம்.

தற்போது நிர்ணயம் செய்துள்ள கொள்முதல் விலை 465 காசுகள் கட்டுப்படியான விலை இல்லை. இருந்தும் மற்ற மாநிலங்களில் என்ன விலை நிர்ணயம் செய்கின்றனர் என்பதை அனுசரித்து, இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதுச்சேரி, கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கேரளாவுக்கு முட்டை அனுப்பப்படுகிறது. ஆழ்கடலில் மீன்பிடி தடைகாலம் என்பதாலும், தேவை அதிகரித்து உள்ளதாலும், வெளிமாநிலங்களில் விற்பனை 50 சதவீதம் வரை முட்டை விலை அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story