குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு அதிகரிப்பு
சிவகாசி உட்கோட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி,
சிவகாசி உட்கோட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
500 ஆலைகள்
சிவகாசி உட்கோட்டத்தில் மட்டும் சுமார் 500 பட்டாசு ஆலைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பட்டாசு ஆலைகளில் விதிகளை மீறி பட்டாசுகள் தயாரிக்கப்படும் போது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவது அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக ஆலைகள் அல்லாத இடங்களில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசாரின் ஆய்வில் கண்டுபிடிக்கப்படும் போது பெயரளவுக்கு வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. பறிமுதல் செய்யப்படும் பட்டாசுகளின் மதிப்பு கூட 30 சதவீதம் மட்டுமே குறிப்பிடப்படுவதாக கூறுகிறார்கள்.
தகர செட்டுகள்
சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையம், திருத்தங்கல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இடங்களில் குடியிருப்பு பகுதியிலும் தற்போது பட்டாசு தயாரிப்பது அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட்டால் உயிர்சேதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதை தடுக்க சிவகாசி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டாசு உற்பத்தியாளர்களை அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.
வழக்குப்பதிவு
ஆனாலும் தற்போது விதிகளை மீறி தகர செட்டுகளில் பட்டாசுகள் தயாரிப்பதும், பதுக்குவதும் அதிகரித்துள்ளது. பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதிபெற்ற சிலர் கடைகளில் பட்டாசுகள் தயாரிப்பதாக கிடைத்த தகவல் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
எனவே பட்டாசு கடைகளில் பட்டாசு தயாரிப்பவர்கள் மீது பெயரளவுக்கு வழக்குப்பதிவு செய்யாமல் உரிய வழக்கு பதிவு செய்தால் மட்டுமே இதுபோன்ற விதிமீறல்களை தடுக்க முடியும். தற்போது உள்ள விதிமீறல்கள் தொடர்ந்தால் நிச்சயம் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.