வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. மேலும் மதுரை மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. அணைக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், வருசநாடு, வெள்ளிமலை, கொட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர்வரத்தாக உள்ளது.
இதற்கிடையே அணையில் இருந்து கடந்த மாதம் முதல் வாரத்தில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த ஒரு ஆண்டாக 60 அடிக்கும் மேல் நீடித்த அணையின் நீர்மட்டம் தற்போது 52 அடியாக குறைந்தது.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 1015 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 447 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 869 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.