கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்கும் பணிக்கான அரசு மானியம் உயர்வு


கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்கும் பணிக்கான அரசு மானியம் உயர்வு
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்கும் பணிக்கு அரசு மானியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிறிஸ்தவ ஆலயங்கள் புனரமைப்பு

தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-2017-ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பின்வருமாறு கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானியத்தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி கூடுதல் பணிகளாக தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல் போன்றவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேவாலய கட்டிடத்தின் வயதிற்கேற்ப 10 முதல் 15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும், 15 முதல் 20 வருடம் வரை இருப்பின் ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாகவும், 20 வருடங்களுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும் மானியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

நிதி உதவி

எனவே விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையினான குழு பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்கள் ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story