வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பு: கலங்கி நிற்கும் சிதம்பரம் கவரிங் தொழிலாளர்கள்


வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பு:  கலங்கி நிற்கும் சிதம்பரம் கவரிங் தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், சிதம்பரம் கவரிங் தொழிலாளர்கள் கலங்கி நிற்கின்றனா்.

கடலூர்

நகைகள் அணிதல் என்றாலே பெண்களுக்கு அலாதி பிரியம். அதுவும் நகை கடைகளுக்கு சென்றால், தங்களுக்கு பிடித்தமான நகைகளை தேர்வு செய்ய நாள் முழுக்க செலவிடுவார்கள். ஆனால் தங்க நகைகள் அனைவராலும் அணிய முடியாது. வசதி படைத்தவர்களின் கழுத்திலும், காதுகளிலும் ஜொலிக்கும்.

இதனால் தங்களால் அணிய முடியவில்லையே என்று ஏழை, எளிய பெண்கள் தவிப்பார்கள். அவர்களின் தவிப்பை போக்கும் வகையில் கவரிங் நகைகள் தயாரிக்கப்பட்டது. தங்க நகைகள் போலவே பல வித மாடல்களில் உருவாக்கப்பட்டு வருவதால், தற்போது ஏழை, வசதி படைத்தவர்கள் என்று எவ்வித பாகுபாடும் பார்க்காமல் அனைவரின் கழுத்துகளிலும் கவரிங் நகைகள் அலங்கரிக்கிறது.

தாய் வீடு

இத்தகைய கவரிங் நகைகள் பல்வேறு ஊர்களிலும் கிடைத்தாலும், சிதம்பரம் கவரிங் நகைகளுக்கு என்று தனி மவுசு எப்போதும் உண்டு. கவரிங் நகைகளுக்கு தாய் வீடாக சிதம்பரம் விளங்கி வருகிறது. ஏனெனில் இங்கு தயாரிக்கப்படும் கவரிங் நகைகள் எளிதில் கருக்காது. இதனால் தான் சிதம்பரம் கவரிங் நகைகளை வாங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த கவரிங் நகைகளை சிதம்பரத்தில் 5 ஆயிரம் பேர் குடிசை தொழிலாக செய்து வந்தனர். தற்போது தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. எந்திரம் மூலம் கவரிங் தயாரிக்கும் பணி அதிகரித்துள்ளதால், குடிசை தொழிலாக செய்து வந்த தொழிலாளர்கள் மாற்று பணிக்கு சென்று விட்டனர்.

தற்போது சிதம்பரம் இளமையாக்கினார்கோவில் தெரு, மின் நகர், பூதக் கேணி, எல்லையம்மன் கோவில் தெரு, மேலவீதி போன்ற இடங்களில் மட்டும் கவரிங் நகைகள் குடிசை தொழிலாக செய்து வரப்படுகிறது.

இங்கு ஒரிஜினல் கவரிங், மைக்ரோ கவரிங், சாதாரண கவரிங் என கவரிங் ரகங்களை தயாரித்து, பெரிய கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இ்வர்களுக்கு போட்டியாக டெல்லி ஆக்ரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து எந்திரங்கள் மூலம் செய்யும் கவரிங் நகைகள் அதிகமாக வருகிறது. இதனால் கையால் செய்யும் கவரிங் நகைகளுக்கு மதிப்பு குறைந்து வருகிறது. இந்த வகை கவரிங்கை டை கவரிங் என்று அழைப்பார்கள். அது தான் பல்வேறு மாடல்களில் கிடைப்பதால், அதை பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால் அதில் தங்கம் கலக்காமல், கெமிக்கல் கலப்பதாகவும் கூறப்படுகிறது.

தரமாக இருக்கும்

இது பற்றி கவரிங் தொழில் செய்யும் தண்டபாணி:-

நான் இந்த கவரிங் தொழிலை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறேன். எங்களிடம் செய்யும் கவரிங் தரமாக இருக்கும். எளிதில் கருக்காது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது வெளி மாநிலங்களில் இருந்துவித விதமாக கவரிங் நகைகள் விற்பனைக்கு வருகிறது. இதனால் நாங்கள் தயாரிக்கும் கவரிங் அதிகம் போகவில்லை. தரத்தை நம்பி உள்ள சிலர் தான் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

வெளி மாநில கவரிங் தரமாக இருக்குமா? என்று தெரியாது. இதை தான் பெண்களும் விரும்பி அணிகிறார்கள். செம்பு விலை கிலோ ரூ.600-ல் இருந்து ரூ.850 ஆக உயர்ந்து விட்டது. ஆனால் எங்களுக்கு செயினுக்கு ரூ.45 வரையும், மோதிரத்துக்கு ரூ.7 முதல் ரூ.10-ம், வளையலுக்கு ரூ.18 வரையும் கிடைக்கும். ஒரு நாளை க்கு ரூ.400, ரூ.500 வரை ஊதியம் கிடைக்கும். இதை வைத்து பிழைப்பு நடத்த முடியவில்லை. இதனால் பலர் இந்த தொழிலை விட்டுவிட்டனர். ஒரு சிலர் தான் வேறு வழியின்றி செய்து வருகிறோம். ஆகவே எங்களுக்கு மானிய நிலையில் செம்பு வழங்கினால், இந்த தொழிலை மேலும் விரிவுபடுத்த முடியும்.

கருக்காது

கவரிங் நகை தொழில் செய்யும் சேகர்:-

இப்போது கவரிங் நகை செய்யும் தொழில் எல்லா ஊர்களிலும் வந்து விட்டது. ஆனா, ஒரிஜினல் கவரிங் சிதம்பரத்தில் தான் கிடைக்கும். அதற்கு காரணம், சிதம்பரத்தின் தண்ணீர். இங்கு செய்யப்படும் நகைகள் அவ்வளவு சீக்கிரம் கருக்காது, தோல் உரியாது. அணிந்து கொள்வதால் சரும பிரச்சினைகள் இருக்காது.

பெண்கள் வித, விதமான டிசைன்களை விரும்புவதால் ஆண்டு முழுவதுமே கவரிங் நகைகளை தயாரிக்கிறோம். தற்போது சிதம்பரத்தில் இது குடிசைத்தொழில் போலவே ஆகிவிட்டது. முன்பு கவரிங் செயின் மட்டும் தான் செய்தோம். ஆனால், தற்போது வளையல், ஆரம், மோதிரம், கொலுசு, ஜிமிக்கி தோடு, மெட்டி, ஒட்டியானம் போன்றவையும் அச்சு அசல் தங்க நகைகளை போலவே செய்கிறோம். ஆனால் கவரிங் செய்ய பயன்படும் செம்புவை அரசு மானியத்தில் வழங்கினால் நல்லது. எந்திர பயன்பாடு அதிகரித்து உள்ளதால், கவரிங் மாடல்கள் அதிகமாக கிடைக்கிறது. கையால் தயார் செய்யும் கவரிங் நகைகள் தரமாக இருந்தும் குறைவாக செல்கிறது.

கவரிங் விற்பனையில் ஈடுபட்டு வரும் சந்திரகுமார்:-

சிதம்பரம் நகரில் 3 தலைமுறையாக எங்கள் குடும்பம் கவரிங் தொழில் செய்து வருகிறது. சிதம்பரத்தில் கவரிங் தொழில் குடிசை தொழிலாக இருந்து வருகிறது. சிதம்பரத்தில் தயாரிக்கப்படும் கவரிங் நகைகள் சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வலம் வருகிறது. சிலர் வியாபாரம் செய்வதற்காகவும் வாங்கி செல்கிறார்கள். கொரோனாவுக்கு பிறகு வியாபாரம் அந்த அளவுக்கு இல்லை.

திருட்டு பயம் இல்லை

கவரிங் தயாரிக்கும் கணேசன்:- நான் சிதம்பரத்தில் 42 வருடமாக கவரிங் நகை தொழில் செய்து வருகிறேன். கவரிங் நகையை அணிவதால் திருட்டு பயம் இருக்காது.

அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் தற்போது தங்க நகைகளை விட அதிகம் கவரிங் நகைகள் அணிவதை தான் சிறுமிகள் முதல் திருமணமான பெண்கள் வரை விரும்புகின்றனர். இதனால் அவர்களுக்கு தகுந்தார்போல் பல்வேறு மாடல்களில் கவரிங் நகைகளை தயார் செய்து விற்பனை செய்கிறோம்.

சுய தொழில்

கவரிங் நகை விற்பனையாளர் சாம்ராஜ் கூறுகையில், சிதம்பரம் கவரிங் நகைகளை வெளிமாவட்டங்களில் இருந்து வரும் விற்பனையாளர்கள் மொத்தமாக வாங்கிச் சென்று விற்பனை செய்கிறார்கள். இது தவிர, இங்கு செய்யப்படும் சில பிராண்டட் கவரிங் நகைகளுக்கு ஒரு வருடம் கேரண்டியும், ரீ சேல் மதிப்பும் இருக்கிறது. தங்க நகைகளை மாற்றிக்கொள்வது போல பழைய கவரிங் நகையை கொடுத்துவிட்டு, புதிதாக நகைகளை கூட வாங்கிக்கொள்ள முடியும். மணப்பெண் அலங்கார நகைகள் என்று தனியாக செட் நகைகளும் கிடைக்கிறது. விலையை பொறுத்தவரை, குறைந்தது 1500 ரூபாயில் இருந்து ரூ.15 ஆயிரம், ரூ.,25 ஆயிரம் வரையிலும் டிசைனுக்கு ஏற்ப இருக்கிறது. குடும்பத் தலைவிகள், கல்லூரி மாணவிகள் சிலர் இங்கு வந்து மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள். அந்த வகையில் சிறந்த சுயதொழில் வாய்ப்பையும் கொடுக்கிறது.

இந்த கவரிங் நகைகளை பாலீஸ் போட்டுக்கொண்டால் போதும். 5 வருடங்களுக்கு அழியாமல் இருக்கும். தங்கத்திற்கு மாற்று கவரிங் நகைகள்தான் என்றாகி விட்டது என்றார்.


Next Story