தமிழகத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு:"நீட் தேர்வை வைத்துஅரசியல் செய்ய வேண்டாம்" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ள நிலையில், “நீட் தேர்வை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்” என திருச்செந்தூர் நடைபயணத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர்:
"தமிழகத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. நீட் தேர்வை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்" என்று திருச்செந்தூர் பாதயாத்திரையில் அண்ணாமலை பேசினார்.
பாதயாத்திரை
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரையை ராமேசுவரத்தில் கடந்த 28-ந்தேதி தொடங்கினார். சட்டமன்ற தொகுதிவாரியாக பாதயாத்திரை மேற்கொள்ளும் அவர் கடந்த 12-ந்தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு பாத யாத்திரையாக வந்தார்.
நேற்று 3-வது நாளாக திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் இருந்து மாலை 6 மணியளவில் தொண்டர்களுடன் பாத யாத்திரையை தொடங்கிய அண்ணாமலைக்கு பொதுமக்கள், கட்சியினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நினைவு பரிசு
திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம், காமராஜர் சாலை, உள்மாடவீதி, பந்தல் மண்டபம், கீழ ரதவீதி, கிருஷ்ணன் கோவில் தெரு வழியாக சுமார் 4 கிலோ மீட்டர் பாத யாத்திரையாக வந்த அண்ணாமலை தெப்பக்குளம் அருகில் திரண்டு இருந்த மக்களிடையே பேசினார்.
முன்னதாக திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அண்ணாமலை, தனியார் மண்டபத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவப்படுத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
நீட் தேர்வு
நீட் தேர்வினால் மாணவரும், தந்தையும் உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. நீட் தேர்வை நீண்ட காலமாக அரசியலாக்குகின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2018-2019-ம் ஆண்டு 13 சதவீதமாக இருந்த தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கடந்த 2022-2023-ம் ஆண்டு 31 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 5 மருத்துவ கல்லூரிகளே புதிதாக தொடங்கப்பட்டன. ஆனால் தனியார் மருத்துவ கல்லூரிகளை அதிகளவில் திறந்தனர். தமிழகத்தில் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.
மக்களிடம் எழுச்சி
தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசு பள்ளிகளிலேயே நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் நீட் தேர்வால் மற்ெறாரு உயிரிழப்பு நிகழ்ந்தால், அதற்கு தி.மு.க. அரசே காரணமாகும்.
நீட் தேர்வு குறித்து பொய்களைக் கூறி, பூதாகரமாக சித்தரித்து மாணவர்களுக்கு மனச்சுமைகளை ஏற்படுத்துகின்றனர். இது வேதனை அளிக்கிறது.
திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் வளைவு அமைப்போம் என்று சட்டசபையில் கூறிய தி.மு.க. அரசு இன்னும் எதையும் நிறைவேற்றவில்லை. எங்களது பாத யாத்திரையில் மக்களிடம் எழுச்சியை காண முடிகிறது. தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்வதை இந்த பாதயாத்திரை உறுதி செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. , பாஜக மாநில துணை தலைவர் சசிகலாபுஷ்பா, மாவட்ட தலைவர் சித்ராங்கதன், தெற்கு மாவட்ட பொது செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.