கறவை மாடுகள் விலை உயர்வு
பொய்கை வாரச்சந்தையில் கறவை மாடுகள் விலை உயர்ந்து காணப்பட்டது.
அணைக்கட்டு தாலுகா பொய்கை வாரச்சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா, வாணியம்பாடி, திருவண்ணாமலை, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக கறவை மாடுகள் கொண்டுவரப் படுகின்றன. இந்த நிலையில் நேற்று நடந்த வாரச்சந்தையில் கறவை மாடுகளின் வரத்து குறைவாக இருந்தது. அதனால் ஒரு கறவை மாடு ரூ.75 ஆயிரம் வரை விலை போனது.
மாடுகளை வாங்க சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வாங்கிச்சென்றனர். இது குறித்து சென்னையைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில் கடந்த நான்கு வாரமாகவே பொய்கை வாரச்சந்தைக்கு கறவை மாடுகள் குறைந்த அளவே வருகின்றது. இதனால் ஒரு கறவை மாடு ரூ.75 ஆயிரத்திற்கு விற்பனையானது. 300-க்கும் மேற்பட்ட கறவை மாடுகள் விற்பனையாகி உள்ளது. கறவை மாடுகள் அதிகமாக விற்பனைக்கு வந்தால் தான் விலை குறையும். இன்னும் நான்கு வாரங்கள் இதே நிலைதான் நீடிக்கும் என தெரிவித்தார். இந்த வாரம் ரூ.2 கோடிக்கு மேல் சந்தையில் வியாபாரம் ஆகி இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.