கடலூரில்மலைக்க வைத்த சின்ன வெங்காயத்தின் விலைஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை
கடலூரில் சின்ன வெங்காயத்தின் விலைஉயர்ந்து மலைக்க வைத்துள்ளது. ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமையல் என்றாலே அதில் பிரதானமாக இடம்பெறுவது வெங்காயம் தான். சட்னி, சாம்பார், கூட்டு, பொறியல், அவியல் என, என்ன உணவாக இருந்தாலும், உணவின் சுவையை கூட்டுவதே வெங்காயத்தின் சிறப்பு. என்னதான் மணக்க மணக்க பிரியாணி இருந்தாலும் தொட்டுக்க வைக்கப்படும் தயிர் வெங்காயம் தான் உணவையே சிறக்க செய்யும்.
இப்படி சிறப்புமிக்க வெங்காயம் அவ்வப்போது விலை உயர்ந்து மலைக்க வைக்கும். பின்னர் திடீரென விலை சரிந்து வியக்க வைக்கும். அந்த வகையில் தற்போது சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து அனைவரையும் மலைக்க வைத்திருக்கிறது.
பெரிய வெங்காயத்துக்கு மாறும்...
ஆம், நேற்று முன்தினம் வரை ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு 60 ரூபாய் உயர்ந்து தற்போது ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடலூர் உழவர் சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.150 முதல் ரூ.155 வரை விற்பனையாகிறது. ஆனால் இதற்கு மாறாக பெரிய வெங்காயத்தின் (பல்லாரி) விலை குறைந்தே காணப்படுகிறது. அவை ஒரு கிலோ ரூ.22 முதல் ரூ.28 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சின்ன வெங்காயத்தை பயன்படுத்துவதை குறைத்து, பெரிய வெங்காயத்தை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
தக்காளி, பீன்ஸ், கத்தரிக்காய், பச்சை மிளகாய், இஞ்சி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்வையே தாங்கிக்கொள்ள முடியாத மக்களுக்கு, தற்போது சின்ன வெங்காயத்தின் விலை உயர்வு பேரிடியாக அமைந்துள்ளது.
காரணம் என்ன?
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வது குறைவு தான். அதனால் ஆந்திரா, பெங்களூரு, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், சேலம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது. தற்போது சின்ன வெங்காயத்தின் வரத்து பெருமளவு குறைந்துள்ளது. அதனால் தான் சின்ன வெங்காயத்தின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை அதிகரித்துள்ளது.
மேலும் பல கடைகளில் சின்ன வெங்காயம் இருப்பு இல்லாததாலும், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரத்து குறைவு காரணமாகவும் வெங்காயத்தின் விலை இன்னும் அதிகரிக்க கூடும் என்றார்.