பச்சை தேயிலை கொள்முதல் விலை உயர்வு
கூடலூர் பகுதியில் தொழிற்சாலைகளுக்கு தேயிலை வரத்து குறைந்து உள்ளது. இதனால் பச்சை தேயிலை கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் தொழிற்சாலைகளுக்கு தேயிலை வரத்து குறைந்து உள்ளது. இதனால் பச்சை தேயிலை கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொப்புள நோய் தாக்குதல்
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதற்கு இணையாக வாழை, காபி, குறுமிளகு விவசாயமும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், பச்சை தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் தொழிலாளர்களுக்கு கூலி வழங்குவதற்கு கூட வருவாய் கிடைக்காமல் தோட்டங்களை பராமரிப்பின்றி விட்டனர்.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை, பனிமூட்டம் என காலநிலை அடிக்கடி மாறியதால் தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பச்சை தேயிலை மகசூல் பாதித்துள்ளது. இதனால் அறுவடை செய்ய முடியாமல் உள்ளது. இதன் தாக்கத்தால் தோட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து உள்ளனர்.
வரத்து குறைந்தது
தொடர்ந்து கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து குறைந்து விட்டது. இதனிடையே தேயிலை விளைச்சல் பாதிக்கப்பட்டதால், வரத்து குறைந்து உள்ளது. கடந்த காலங்களில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.13 விலை நிர்ணயிக்கப்பட்டு வந்தது. தற்போது வரத்து குறைந்து உள்ளதால் தேயிலை கிலோ ரூ.17 ஆக உயர்ந்து உள்ளது. பச்சை தேயிலை கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த ஓராண்டுக்கும் மேலாக பச்சை தேயிலை விலை மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து தோட்டங்களையும் பராமரிக்கவில்லை. கடந்த மாத இறுதியில் பரவலாக வெயில் காணப்பட்டதால் மகசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில வாரங்களாக தொடர் மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக நோய் தாக்குதல் அதிகரித்து விளைச்சல் குறைந்து உள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது என்றனர்.