ஆண்டாங்கோவில் தடுப்பணையில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரிப்பு


ஆண்டாங்கோவில் தடுப்பணையில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
x

ஆற்றுப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆண்டாங்கோவில் தடுப்பணையில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கரூர்

தடுப்பணை

கரூர் அருகே ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நேற்று முன்தினம் முதல் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆற்றுப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகவே தண்ணீர் வரத்து அதிகமாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று முன்தினம் அமராவதி ஆற்றில் வினாடிக்கு 725 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 80.42 ஆக இருந்தது.

தண்ணீர் திறப்பு

அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டதால் கரூர் அருகே ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு கடந்த 29-ந்தேதி முதல் தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் ஆற்றுப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நேற்று முன்தினம் காலை 6 மணி நிலவரப்படி ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு 185 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று 79.86 ஆக இருந்தது. நேற்றைய நிலவரப்படி அமராவதி ஆற்றில் வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

பராமரிப்பு பணிகள்

கரூர் ஆண்டாங்கோவில் அமராவதி ஆற்றின் குறுக்கே கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தடுப்பணை கட்டப்பட்டது. இங்கு பொது மக்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பாக நின்று அணைப்பகுதியை பார்க்கும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தடுப்பணை பகுதியில் பராமரிப்பு பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தப்பகுதியில் உள்ள தடுப்பு கம்பிகள் மற்றும் தண்ணீர் திறப்பு பகுதிகளில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக மேற்படி தடுப்பணைகள் புத்தம் புது பொலிவுடன் காட்சியளிக்கின்றன.

வடகிழக்கு பருவமழை

தென்மாநிலங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை 48 செ.மீ கடந்த காலங்களில் பெய்தது. இது இயல்பை விட 45 சதவீதம் அதிகம். அதனை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை நடப்பாண்டில் தென் மாநிலங்களில் இயல்பாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் போது இயல்பான மழை அளவு 44 செ.மீ., இந்த ஆண்டு இதையொட்டியே மழையளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை இம்மாதம் 4 - வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வருங்காலங்களில் கரூர், ஆண்டாங்கோவில் அமராவதி ஆற்றின் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story